ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள் அனைத்தும் சுருக்கமாக உள்ளே..!!

Published: 26 Feb 2022, 3:51 PM |
Updated: 26 Feb 2022, 4:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று வரையிலும் நடைமுறையில் இருந்து வந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கி அமீரக அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்திருந்தது. அமீரக அரசு அறிவித்த இந்த புதிய விதிமுறைகளானது இன்று பிப்ரவரி 26 முதல் அமீரகம் முழுவதும் அமலுக்கும் வந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி குடியிருப்பாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அமீரகம் வரும் சுற்றுலாவாசிகள் ஆகியோருக்கான பல கோவிட்-19 விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. மேலும் இதில் மாஸ்க் கட்டுப்பாடு, சமூக இடைவெளி, பயண நடைமுறைகள், அபுதாபிக்குள் நுழைவதற்கான நுழைவு கட்டுப்பாடு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுளளது.

தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பை தெடர்ந்து இன்று முதல் அமீரகத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் சுருக்கமாக இங்கே காண்போம்.

ADVERTISEMENT

துபாய்

– கடற்கரைகள், பொதுப் பூங்காக்கள் போன்ற வெளிப்புறப் பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. இனி இங்கெல்லாம் முகக்கவசம் அணிவது தனிநபரின் விருப்பமானது.

– ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற துபாயில் உள்ள அனைத்து பொது உட்புற இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும்.

ADVERTISEMENT

– கொரோனா தொற்றுநோய்க்கான எந்த அறிகுறிகளையும் அனுபவிக்காத கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

– இந்தியாவிலிருந்து துபாய் வரும் அமீரக குடியிருப்பாளர்கள் இனிமேல் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக GDRFA / ICA ஒப்புதல் பெற தேவையில்லை.

– இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து துபாய் வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் QR குறியீட்டைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பயணத்திற்கு முந்தைய PCR சோதனை முடிவு தேவையில்லை.

– தடுப்பூசி போடப்படாத பயணிகள், கடந்த 48 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவு அல்லது பயண தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெறப்பட்ட கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்ததற்கான சான்றிதழை QR குறியீட்டுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

அபுதாபி

– பிப்ரவரி 28 முதல் மற்ற எமிரேட்டிலிருந்து அபுதாபிக்குள் நுழைய அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ் தேவையில்லை. கோவிட்-19 அறிகுறிகளுக்காக பயணிகளை பரிசோதிக்கும் EDE ஸ்கேனர்களும் சோதனைச் சாவடிகளில் இருந்து அகற்றப்படும். இருப்பினும் அபுதாபியில் உள்ள பொது இடங்களை அணுகுவதற்கு கிரீன் பாஸ் தேவைப்படும்.

– கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பாசிட்டிவ் நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது கைக்கடிகாரம் அணிய வேண்டிய அவசியமில்லை.

– நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினமும் PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

– வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது விருப்பமானவை. எனினும் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட அனைத்து மூடிய பகுதிகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

– சுற்றுலா தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில், செயல்பாட்டு திறன் 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வுகள், சுற்றுலா இடங்கள் மற்றும் வணிக இடங்களுக்குள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

– அபுதாபி வரும் சர்வதேச பயணிகளுக்கான கோவிட்-19 சோதனைத் தேவைகள் நீக்கப்பட்டுள்ளன. அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தனிமைப்படுத்தலுக்கான நெறிமுறைகளும் அகற்றப்பட்டுள்ளன.

– அபுதாபியின் அரசு கட்டிடங்களில், அனைத்து பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கிரீன் பாஸ் அவசியம். தடுப்பூசி போடப்படாத பணியாளர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

துபாய், அபுதாபி தவிர மற்ற எமிரேட்களில் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்த பொதுவான விதிமுறைகளே பின்பற்றப்படும். எனினும் மற்ற எமிரேட்டிலிருந்து புதிய மாற்றங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டால் அது குறித்த கூடுதல் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.