ADVERTISEMENT

UAE: பாஸ்போர்ட், விசா சேவைகளை இனி வாரத்தின் 7 நாட்களும் பெறலாம்.. இந்திய துணை தூதரகம் அறிவிப்பு..!!

Published: 21 Jan 2023, 4:45 PM |
Updated: 21 Jan 2023, 4:55 PM |
Posted By: admin

அரசு மற்றும் தூதரக பணிகளுக்கான இந்திய அவுட்சோர்சிங் சேவையை வழங்கும் BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனமானது அமீரகத்தில் இனி விடுமுறையின்றி தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 22 முதல் வாரத்தில் ஏழு நாட்களும் BLS செயல்படும் என்று இந்திய துணைத் தூதரகம் (CGI) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கான அரசாங்க மற்றும் தூதரகப் பணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், தூதரகம், சான்றளிப்பு மற்றும் குடிமக்கள் சேவைகளை இந்த BLS சர்வதேச சேவை நிர்வகிக்கிறது.

இது குறித்து இந்திய தூதர் டாக்டர். அமன் பூரி கூறியதாவது: “வாரத்தில் ஏழு நாட்களும் BLS மையங்களை திறக்கும் நடவடிக்கையானது, புலம்பெயர்ந்த இந்தியர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன் மூலம் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அமைந்துள்ள மூன்று மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) தொடங்கி அனைத்து நாட்களிலும் பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான சேவைகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் அரசாங்க விடுமுறை நாட்களைத் தவிர்த்து, இந்த மையம் ஆண்டு முழுவதும் தூதரக சேவைகளுக்காக திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், “ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இந்த மையங்களில் அப்பாய்மெண்ட் அடிப்படையில் வந்து சமர்ப்பிக்கலாம். இது காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படும். அதே நேரத்தில், தட்கல் மற்றும் அவசரகால நி்லைமைகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்-இன் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய சேவை நேரத்தின் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் தூதரக சேவைகளைப் பெறுவதற்கு ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.