துபாயில் வசிக்கும் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டுமானால் அதற்காக பெரிதாக அலைய தேவையில்லை. முதலில் நீங்கள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஓட்டுநர் உரிமங்களுக்கான கண் பரிசோதனைகளை நடத்தும் அருகிலுள்ள ஆப்டிகல் கடைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்ததும், வெகு சில நிமிடங்களிலேயே உங்கள் மொபைலில் விரைவாக விண்ணப்பித்து லைசன்ஸை நேரடியாக உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யலாம். ஆனால், அதற்கு உங்களது UAE PASS மற்றும் RTA ஆகியவற்றின் ஆன்லைன் அக்கவுண்டை சரியாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு கணக்குகளையும் உங்கள் ஸ்மார்ட்போனில் எளிதில் அமைக்கலாம்.
RTA-வில் உங்கள் அக்கவுண்டை பதிவு செய்யும் முறை:
உங்களிடம் ஏற்கெனவே RTA அக்கவுண்ட் இல்லையெனில் கீழ்க்கண்ட படிகள் மூலம் நீங்கள் செயல்முறையை முடிக்கலாம்.
- RTA அப்ளிகேஷனை பதிவிறக்கி முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Login/Register’ என்பதைக் கிளிக் செய்து UAEPASS மூலம் உள்நுழையவும்.
- உங்கள் UAE PASS மற்றும் RTA அக்கவுண்ட் இணைக்கப்படவில்லை எனில், உங்கள் UAE PASS மற்றும் RTA கணக்கை இணைப்பதற்கான பாப்-அப் நோடிஃபிகேஷனை பெறுவீர்கள். உங்களிடம் RTA அக்கவுண்ட் இல்லையென்றால் ‘Register’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி, தேசியம் மற்றும் மொபைல் போன்ற உங்களின் விவரங்கள் UAEPASS மூலம் தானாக உள்ளிடப்படும். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விவரங்களைச் சரிபார்த்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கினால் போதும்.
- அடுத்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும். இந்த இரண்டு கணக்குகளையும் நீங்கள் அமைத்தவுடன், புதுப்பித்தல் செயல்முறையை நீங்கள் தொடங்கலாம்.
படி 1: கண் பரிசோதனையை செய்யவும்:
RTA ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கண் பரிசோதனைகளை மேற்கொள்ளும் உங்களுக்கு அருகிலுள்ள ஆப்டிக்கல் கடைக்குச் சென்று, பின்வரும் ஆவணங்களுடன் பரிசோதனையை முடிக்க வேண்டும் :
- அசல் UAE டிரைவிங் லைசன்ஸ்
- அசல் எமிரேட்ஸ் ஐடி
உங்களிடம் அசல் ஆவணங்கள் இல்லையென்றால், இந்த இரண்டு ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளையும் கடை ஏற்றுக்கொள்கிறதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
செலவு: தோராயமாக 140 திர்ஹம்கள் செலவாகும். ஆனால் இது சேவை வழங்குநரின் அடிப்படையில் சிறிது மாறுபடலாம்.
உங்கள் கண் பரிசோதனைக்கு பணம் செலுத்தியவுடன், ஆப்டிகல் நிபுணர் உங்கள் சோதனை முடிவுடன் RTA அமைப்பில் புதுப்பிப்பார். அதன்பின் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும், இப்போது உங்கள் லைசென்ஸை புதுப்பிக்க தொடரலாம்.