ADVERTISEMENT

துபாய்: அடுத்த சீசன் துவங்கப்படும் தேதியை வெளியிட்ட குளோபல் வில்லேஜ்..!! கூடுதல் நாட்கள் இயங்கும் எனவும் தகவல்..!!

Published: 11 Jun 2023, 6:37 PM |
Updated: 11 Jun 2023, 7:59 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் மிகவும் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் உலக பிரசித்தி பெற்ற இடமான குளோபல் வில்லேஜின் முந்தைய சீசன் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைந்த நிலையில் தற்பொழுது அடுத்த சீசன் ஆரம்பிக்கப்படும் தேதியை குளோபல் வில்லேஜ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ம் ஆண்டில்  குளோபல் வில்லேஜின் 28வது சீசன், வழக்கத்தை விட ஒரு வாரத்திற்கு முன்னதாக வரும் அக்டோபர் 18 அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பார்வையாளர்களின் தேவைக்கு ஏற்பவும், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க ஒரு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பை வழங்குவதற்காகவும் அடுத்த சீசன் கூடுதல் வாரம் நடைபெற திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்தும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஆண்டுதோறும் ஈர்த்துவரும் இந்த முக்கிய பன்முக கலாச்சார இடமானது, கலாச்சார பரிமாற்றம், பல்வேறு உணவு வகைகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் ஷாப்பிங் போன்ற எண்ணற்ற அனுபவங்களின் கலங்கரை விளக்கமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, வழக்கத்தை விட ஒரு வாரத்திற்கு முன்னதாக திறப்பதன் மூலம், பார்வையாளர்கள் ஷாப்பிங், பொழுதுபோக்கு, பல்சுவை உணவு அனுபவங்கள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இணையற்ற கொண்டாட்டங்களை கூடுதல் நாட்கள் அனுபவிக்க முடியும் என்றும் குளோபல் வில்லேஜ் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.