ADVERTISEMENT

உலகளவில் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த கத்தார் ஏர்வேஸ்… பொழுதுபோக்கு, உணவு, இருக்கை வசதிகளில் சிறந்து விளங்குவதாக தகவல்..!

Published: 29 Aug 2023, 7:17 PM |
Updated: 29 Aug 2023, 7:47 PM |
Posted By: admin

உலக அளவில் சிறந்த சேவையினை வழங்கும் விமான நிறுவனங்களின் பட்டியலை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட லக்கேஜ் சேமிப்பு நிறுவனமான பவுன்ஸ் வெளியிட்டுள்ளது. விமான நிறுவனத்தின் தரம், சரியான நேரத்தில் வந்த பயணிகளின் எண்ணிக்கை, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் விமானத்தின் கேட்டரிங் தரம் போன்ற பல்வேறு வகையான கணக்கீடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில், ‘2023 Airline Index by Bounce’ என்ற தலைப்பிற்கு கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான விமான நிறுவனங்களின் தரவரிசையினை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தரவரிசையில் கத்தார் ஏர்வேஸ், 7.50 மதிப்பெண்ணுடன் உலகின் மூன்றாவது சிறந்த விமான நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் 8.28 மதிப்பெண்ணுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு 7.63 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. கத்தார் ஏர்வேஸ் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.47 புள்ளிகள் அதிகரித்து இந்த ஆண்டு மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல், கத்தார் ஏர்வேஸ் விமானம் பொழுதுபோக்கு, உணவு, இருக்கை வசதி மற்றும் பணியாளர் சேவை ஆகியவற்றில் 5-ல் 4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த விமான டிக்கெட் ரத்து விகிதமாக 0.33% மட்டுமே பதிவு செய்துள்ளது. சர்வதேச விமானங்களை சரியான நேரத்தில் இயக்கியதில் 77.51 சதவீதத்தை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல் பயணிகள் 46 கிலோ எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்லலாம் என்பதுடன் சொகுசான பயணத்தையும் வழங்குவதால் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது என பவுன்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது

அது மட்டுமல்லாமல், கத்தார் ஏர்வேஸ் தோஹாவில் இருக்கும் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகளவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சிகாகோ, டல்லாஸ், நியூயார்க் உட்பட்ட உலகின் பல முன்னணி இடங்களுக்கு விமான சேவையை அளித்தாலும் தோஹா முதல் லண்டன் வரை இயங்கும் விமான பாதையானது கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதன்மையான விமான பாதையாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

புள்ளி விவரங்களை குறித்து பவுன்ஸ் நிறுவனம் கூறும் பொழுது, விமான நிறுவனத்தின் சரியான வருகை சதவீதம் மற்றும் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் சதவீதம் முதலிய கணக்கெடுப்புகள் OAG.com இலிருந்து எடுக்கப்பட்டவை என தெரிவித்துள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு முழுவதும் கணக்கிடப்பட்ட புள்ளி விவரங்களின் சராசரி மதிப்பை கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் விமானத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள், உணவின் தரம், இருக்கை வசதி மற்றும் ஊழியர்களின் சேவைகள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றிற்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.