ADVERTISEMENT

UAE: லுலு குழுமத்தில் பணிபுரியும் இந்தியர் 6 இலட்சம் திர்ஹம்சுடன் தலைமறைவு!! அபுதாபி காவல்துறையில் லுலு நிர்வாகம் புகார்….

Published: 28 Mar 2024, 1:00 PM |
Updated: 28 Mar 2024, 1:14 PM |
Posted By: Menaka

அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லுலு குழுமத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் சுமார் 660,000 திர்ஹம் வரையிலான பணத்துடன் தலைமறைவாகியதாக அபுதாபி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குற்றம் சாட்டப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்த 38 வயதான நபர் என்றும், அபுதாபி சிட்டியில் உள்ள கலீதியா மாலில் (Khalidiya Mall) உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள பண அலுவலகத்தின் பொறுப்பாளராக பணிபுரிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லுலு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மார்ச் 25 அன்று மதியம் பணிக்கு வர வேண்டிய ஊழியர் வரவில்லை மற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், உடனடியாக பணியிடத்தில் சோதனை செய்யப்பட்டதாகவும், அந்த தணிக்கையில் 600,0000 திர்ஹம்களுக்கு மேல் பணப் பற்றாக்குறை இருப்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து ஹைப்பர் மார்க்கெட் நிர்வாகம் காணாமல் போன பணம் தொடர்பாக உள் விசாரணையையும் நடத்தியுள்ளது. மேலும், அவர் இருக்கும் இடத்தை இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் பணத்தை கையாளும் பொறுப்பில் இருந்ததால், அவரது பாஸ்போர்ட் நிறுவனத்தால் தக்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தை  விட்டு வெளியேறுவது கடினம் என்றும் லுலு நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

லுலு நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 15 ஆண்டுகளாக லுலு குழுமத்துடன் இணைந்து பணியாற்றி வந்த இந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபியில் வசித்து வந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அந்த குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கேரள காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாக லுலு குழுமம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel