உலகம் முழுவதும் ஓட்டுநர் இல்லாத வாகன பயணம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள சில பகுதிகளில் இப்போது ஓட்டுநர் இல்லாத சவாரிகளை பயணிகள் அனுபவிக்க முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அபுதாபியில், வீ ரைடு (WeRide) உடனான உபெர் (Uber) இன் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, உபெர் ஆப்ஸ் பயனர்கள் UberX அல்லது Uber Comfort சேவைகளை முன்பதிவு செய்யும் போது WeRide வாகனங்களுடன் பொருந்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, அப்ளிகேஷன் அமைப்புகளில் உள்ள Ride Preferences பிரிவின் வழியாக தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்தச் சேவையானது, முதலில் ஸாதியத் ஐலேண்ட் (saadiyat island), யாஸ் ஐலேண்ட் (yas island), மற்றும் சையத் சர்வதேச விமான நிலையத்திற்குச் (zyed international airport) செல்லும் மற்றும் வரும் வழிகள் உள்ளிட்ட நியமிக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் என்றும், எதிர்காலத்தில் அபுதாபியில் உள்ள பிற பகுதிகளுக்கும் செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துவக்கத்தின் ஆரம்ப கட்டத்தில், பயணிகள் மற்றும் பாதசாரிகள் இருவருக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பாதுகாப்பு ஆபரேட்டர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓட்டுநர் இல்லா சேவைகளை வணிக ரீதியாக முழுமையாக தொடங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணைத் தலைவரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், உபெரில் இந்த தானியங்கி இயக்கம் சேவை தொடங்கப்படுவதை சமீபத்தில் பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் மற்றும் தானியங்கி அமைப்புகள் கவுன்சிலின் (SASC) வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (அபுதாபி மொபிலிட்டி) ஆதரவுடன் uber இயங்குதளத்தில் WeRide வாகனங்களை இயக்குவதற்கு Tawasul Transport பொறுப்பாகும்.
இது குறித்து ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (அபுதாபி மொபிலிட்டி) செயல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா அல் கஃப்லி கூறியதாவது: “இந்த முயற்சி போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் போன்ற எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். செல்ஃப் டிரைவிங் வாகனங்கள் போன்ற போக்குவரத்து சேவை, பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், இது அபுதாபியில் மிகவும் நிலையான மற்றும் திறமையான போக்குவரத்து தீர்வுகளை நோக்கி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் ஸ்மார்ட் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளும் அபுதாபியின் திறனை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தார். மேலும், இந்த முயற்சியை நனவாக்க எங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் மேலும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel