ஐக்கிய அரபு அமீரகம் கார்பன் உமிழ்வு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் விதமாக ஏர் டாக்ஸி, எலெக்ட்ரிக் வாகனம் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாட்டின் போக்குவரத்து நெட்வொர்க்கில் விரைவில் ஒரு புதிய எதிர்கால போக்குவரத்து வாகனம் (futuristic transportation vehicle) வரவிருப்பதாக ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
‘Seaglider’ எனப்படும் இந்த ஒரு நவீன வாகனம் ஹெலிகாப்டரைப் போல வேகமாக பயணிக்கும், ஆனால் டாக்ஸி சவாரியை விட மலிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் (World Governments Summit) கலந்துகொண்ட ரீஜண்ட் கிராஃப்ட் (Regent Craft) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பில்லி தால்ஹைமர் அவர்கள், புதிய எலெக்ட்ரிக் கிராஃப்ட் பற்றிய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். இது தண்ணீருக்கு மேல் செயல்படவும் விரைவான மற்றும் மலிவான பயணத்தை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வாகனம் குறித்து அவர் விவரித்த போது, seaglider என்பது அனைத்து மின்சார, விங்-இன்-கிரவுண்ட்-எஃபெக்ட் கிராஃப்ட் ஆகும். இது ஒரு விமானத்தின் வேகத்தையும், ஒரு படகின் செலவு மற்றும் அணுகலையும் ஒருங்கிணைக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, CEO பில்லி தால்ஹைமர் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், சீக்லைடரின் முன்மாதிரி விரைவில் தண்ணீரில் சோதிக்கப்படும் என்றும், மேலும் நடப்பாண்டின் கோடைகாலத்திற்குள் காற்றில் சோதிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்ததுடன், முழு தயாரிப்பும் 2026 இன் பிற்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முடிவடையும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சீக்லைடரின் அம்சங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் சீக்லைடரின் சிறந்த அம்சங்களில் ஒன்று அதன் வேகம் மற்றும் குறைந்த செலவு. ஏனெனில், 12 இருக்கைகள் கொண்ட சீக்லைடரில் உள்ள பயணிகள் அபுதாபி மெரினா மற்றும் துபாய் மெரினா இடையே ஒரு பயணத்திற்கு வெறும் 45 டாலர் அல்லது 165 திர்ஹம்ஸ் மட்டுமே செலுத்துவார்கள் என்று தால்ஹைமர் விளக்கியுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, சீக்லைடரானது, நவீன விமானம் மற்றும் படகுகள் போன்ற பாதுகாப்பு தரங்களுடன் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போதைய பேட்டரி தொழில்நுட்பத்துடன் 180 மைல் (300 கி.மீ) வரை பயணிக்க முடியும் என்றும், அடுத்த தலைமுறை பேட்டரிகள் கிடைத்தவுடன் 500 மைல் (800 கி.மீ) வரை பயணிக்கலாம் என்பதையும் எடுத்துரைத்த அவர், சீக்லைடர்கள் போர்டிங் மற்றும் இறங்குவதற்கு தற்போதுள்ள கப்பல்துறைகளைப் பயன்படுத்தும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சீக்லைடர் எப்படி செயல்படுகிறது?
ரீஜண்ட் கிராஃப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பில்லி தால்ஹெய்மர், சீக்லைடர் முன்மாதிரி தண்ணீரில் சோதிக்கப்பட்ட வீடியோவைக் காட்டி விளக்கமளித்துள்ளார். அவர் விளக்கிய படி, சீக்லைடர் மூன்று முறைகளில் (float, foil, fly) பின்வருமாறு இயங்குகிறது.
ஆரம்பத்தில் குறைந்த வேகத்தில் செயல்பட ஆரம்பிக்கும் போது அது தண்ணீரில் மிதக்கிறது. அது வேகமடையும் போது, ஹைட்ரோஃபோயில்கள் மீது உயர்கிறது . பின்னர் நீருக்கடியில் இறக்கைகள், இழுவைக் குறைக்கவும் அலைகளைத் தவிர்க்கவும் கிராஃப்ட்டை நீரிலிருந்து வெளியே தூக்கும். இறுதியாக, இது “கிரவுண்ட் எஃபெக்ட்” எனப்படும் தனித்துவமான முறையைப் பயன்படுத்தி 180 mph (300 km/h) வேகத்தில் நீரின் மேல் பறக்க முடியும், இது நீரின் மேற்பரப்பிற்கு சற்று மேலே இருக்க அனுமதிக்கிறது.
‘Regent Craft’ ஏற்கனவே உலகம் முழுவதிலுமிருந்து 9 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றுள்ளது மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் நியோம் போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து 90 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், அபுதாபியின் ஸ்மார்ட் மற்றும் தன்னாட்சி இயக்கத்திற்கான நிகழ்வான DRIFTx இல் அபுதாபி முதலீட்டு அலுவலகம் (ADIO) மற்றும் ரீஜண்ட் கிராஃப்ட் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனை தொடர்நது தொடர்ச்சியாக, திட்டங்கள் முன்னே்றி வருவதாகவும், விரைவில் சில பெரிய அறிவிப்புகள் இருக்கும் என்றும் தல்ஹெய்மர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel
