ADVERTISEMENT

டூரிஸ்ட் விசாவில் துபாய் வந்து காணாமல் போன தமிழர் துபாய் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு..!!

Published: 28 Nov 2020, 3:53 PM |
Updated: 28 Nov 2020, 3:55 PM |
Posted By: admin

தமிழகத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு டூரிஸ்ட் விசாவில் வந்து காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த தமிழகத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் சமயமுத்து (வயது 46) என்ற நபரை துபாய் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கடந்த நவம்பர் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து மூன்று பேருடன் சேர்ந்து துபாயை வந்தடைந்த அமிர்தலிங்கம் சமயமுத்து, மறுநாளில் இருந்து காணவில்லை என்று அமீரகத்தில் உள்ள அவரது உறவினர் துரை என்பவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து நவம்பர் 16 ம் தேதி துரையின் உறவினர் கண்ணன் நாகூர்கனி என்பவர் அமிர்தலிங்கம் சமயமுத்து காணாமல் போனது பற்றி அல் முரகாபத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், 19 நாட்களுக்குப் பிறகு தற்பொழுது அவர் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கண்ணன் நாகூர்கனிக்கு இன்று (சனிக்கிழமை) துபாய் போலீசார் தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கண்ணன் நாகூர்கனி கூறுகையில், “நான் அமிர்தலிங்கம் சமயமுத்துவிடம் இன்று தொலைபேசியில் பேசினேன். அவரைப் இன்று பார்க்க முடியாது என்று என்னிடம் கூறப்பட்டது. நான் நாளை காவல் நிலையத்திற்குச் சென்று அதன்பிறகுதான் அவரைப் பார்க்க முடியும்” என்று கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வேலை தேடி துபாய் வந்து காணாமல் போயிருந்த அமிர்தலிங்கம் சமயமுத்துவை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு காவல் நிலையம் மற்றும் இந்திய தூதரகத்திடமும் உறவினர்கள் மூலம் முறையிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கண்ணன் மேலும் தெரிவிக்கையில், அமிர்தலிங்கம் இங்கு வந்தவுடனேயே சில நாட்களாக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகவும் அவர் மருத்துவமனையில் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்று எனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் அனைவரும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியும் அடைந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துரை கூறுகையில், அவரிடம் அமீரக சிம் கார்டு இல்லாததால் அமிர்தலிங்கம் அவரது வீட்டினரிடமும் பேசவில்லை. என்னிடமும் ஏதும் பேசவில்லை. அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காதலால் கடந்த நவம்பர் 16 ம் தேதி எனது உறவினர் கண்ணன் நாகூர்கானி அல் முரகாபத் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தாகவும் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

காணாமல் போன அமிர்தலிங்கம் சமயமுத்து குறித்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக எந்த தகவலும் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினர் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் முறையிட்டுள்ளனர். தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஒரு ட்வீட் மூலம் புகாரைப் பெற்ற பின்னர், இந்த விவகாரத்தில் உதவி செய்வதாகக் கூறி அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்கிறோம் என்றும் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.