ADVERTISEMENT

UAE: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?? சுகாதார அதிகாரிகளின் விளக்கம்..!!

Published: 16 Dec 2020, 1:05 PM |
Updated: 16 Dec 2020, 1:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் சீன நிறுவனத்தை சேர்ந்த கொரோனவிற்கான தடுப்பூசியானது பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அமீரகம் முழுவதும் உள்ள பல்வேறு சுகாதார மையங்களில் கொரோனாவிற்கான தடுப்பூசி குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது வரையிலும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவிற்கான தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஏற்கெனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா என்ற சந்தேகமானது மக்களுக்கு உள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை (immunity test) செய்ய வேண்டியிருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் கொரோனா தொடர்பான விளக்கவுரைகளின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஒமர் அல் ஹம்மடி அவர்கள் கூறுகையில், வைரஸிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு இம்யூனிட்டி பரிசோதனை செய்யப்படும் என்றும் ஆன்டிபாடிகள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் கூறுகையில், “ஆய்வுகளின்படி, லேசான அறிகுறிகளுடன் அல்லது அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் அந்த வைரசிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதில்லை. மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதே போல், கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு ஆன்டிபாடி பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படும்,. அதில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தற்பொழுது குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் கவனத்துடன் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

அமீரகத்தில் கொரோனாவிற்காக நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து புதிய தொற்றுகள் வீதம் வெறும் 1 சதவீதம் மட்டுமே இருக்கின்றது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதமானது மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.