கடந்த ஐந்தரை ஆண்டுகளில் உலகில் அதிகமாக Virtual Private Network (VPN) பயன்பாடுகளை ஏற்றுக்கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் பதிவு செய்துள்ளதாக சைபர்நியூஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 2020 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதி வரை ஐக்கிய அரபு அமீரகம் 65.78% என்ற VPN பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்து, VPN பயன்பாட்டில் உலகளாவிய பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அமீரகத்தைத் தொடர்ந்து கத்தார் (55.43%), சிங்கப்பூர் (38.23%), நவ்ரு (35.49%), மற்றும் ஓமான் (31%) ஆகியவை அடுத்த்டுத்த தரவரிசையில் உள்ளன.
மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் 6.11 மில்லியன் VPN அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ததாக தரவுகள் கூறுகின்றன, இது 2024 இல் 9.2 மில்லியன், 2023 இல் 7.81 மில்லியன் மற்றும் 2022 இல் 6.54 மில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய வேகம் தொடர்ந்தால், இந்த ஆண்டு பதிவிறக்கங்கள் கடந்த ஆண்டின் மொத்தத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேர்ல்டோமீட்டர் படி, VPN பயன்பாட்டின் அதிகரிப்பு அமீரகத்தில் அதிகரிக்கும் மக்கள்தொகை உடன் ஒத்துப்போகிறது, இது 11.44 மில்லியனை எட்டியுள்ளது.
அமீரகத்தில் VPN பயன்பாடு சட்டப்பூர்வமானதா?
அமீரகத்தில் VPN ஐப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது என்றாலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அதைத் தவறாகப் பயன்படுத்துவது கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அமீரகத்தில் வதந்திகள் மற்றும் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பான 2021 ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணைச் சட்டம் எண் (34) இன் கீழ், குற்றங்களைச் செய்ய VPNகளைப் பயன்படுத்துவது அல்லது தடை செய்யப்பட்ட வலைத்தளங்கள், பயன்பாடுகள் அல்லது சில VoIP அழைப்பு தளங்கள் போன்ற சேவைகளை அணுக ஒருவரின் அடையாளத்தை மறைப்பது கடுமையான குற்றமாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம்ஸ் முதல் 2 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வளைகுடா நாடுகளில் VPN பயன்பாடு
VPN பயன்பாட்டில் அமீரகத்தின் வலுவான பயன்பாடு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் பிரதிபலிக்கிறது. ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் ப்ளே ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, கத்தார் (39.6%), ஓமான் (36.7%) மற்றும் சவுதி அரேபியா (19.7%) ஆகியவற்றிலும் VPN பயன்பாட்டு விகிதங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலும், இந்த நாடுகளில் WhatsApp, Skype மற்றும் FaceTime போன்ற சில இணைய அழைப்பு சேவைகளின் கட்டுப்பாடு காரணமாகவே இந்த போக்கு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர், இது குடியிருப்பாளர்கள் தகவல் தொடர்புக்காக VPNகளை நாட ஊக்குவிக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகளாவிய VPN போக்குகள்
உலகளவில், VPN பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக மத்திய கிழக்கில் VPN பயன்பாடு மிக அதிகமாக உள்ளது என்று சைபர்நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, ஆப்பிரிக்கா மிகக் குறைந்த VPN பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளது, அதன் 21 கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் எதுவும் முதல் 50 இடங்களுக்குள் வரவில்லை. மேலும், குறைந்த VPN பயன்பாட்டு விகிதங்களைக் கொண்ட பத்து நாடுகளில் எட்டு இந்த கண்டத்தில் அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது.
அமீரக குடியிருப்பாளர்களில் 65% க்கும் அதிகமானோர் VPNகளைப் பயன்படுத்தும் பட்சத்தில், VPNகள் தடை செய்யப்படவில்லை என்றாலும், அவற்றின் தவறான பயன்பாடு கடுமையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அதிகாரிகள் பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel