2021 ம் ஆண்டு இன்னும் ஒரு சில தினங்களில் துவங்கவிருப்பதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க பல்வேறு கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அமீரகத்தின் துபாய், அபுதாபி, ராஸ் அல் கைமா, அஜ்மான் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அமீரகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் நடைபெற உள்ளது என்பதை கீழே காணலாம்.
துபாய்
துபாயில் டவுன்டவுன் துபாய் (Downtown Dubai), குளோபல் வில்லேஜ் (Global Village), அட்லாண்டிஸ் தி பாம் (Atlantis), புர்ஜ் அல் அராப் (Burj Al Arab), தி பீச் (JBR Beach) துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் (Dubai Festival City) மற்றும் அல் சீஃப் துபாய் (Al Seef) ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துபாயின் புளூவாட்டர்ஸ் தீவில் (Bluewater Island) வண்ணமயமான வான வேடிக்கை நிகழ்ச்சியானது டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கும், ஜனவரி 1 ஆம் தேதி இரவு 8 மணிக்கும் நிகழ்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா
இந்த ஆண்டு, ஷார்ஜாவில் உள்ள அல் மஜாஸ் ஆம்பிதியேட்டரில் (Al Majaz Amphitheater) வான வேடிக்கை நிகழ்த்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி
அபுதாபியில் அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவலில் இரண்டு உலக சாதனைகளை முறியடிக்கும் விதமாக 35 நிமிடங்கள் நீடிக்கும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, அபுதாபியில் யாஸ் தீவிலும் புத்தாண்டையொட்டி வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அஜ்மான்
அஜ்மானில் வான வேடிக்கை நிகழ்ச்சிகளானது இரண்டு இடங்களில் இருந்து நிகழ்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
1. அஜ்மான் கார்னிச்சில் அஜ்மான் சாரேக்கு எதிரே (Ajman Saray)
2. அல் ஸோராவில் உள்ள ஓபராய் பீச் ரிசார்ட்டுக்கு அடுத்ததாக (Oberoi Beach Resort at Al Zorah).
ராஸ் அல் கைமா
ராஸ் அல் கைமாவில் 10 நிமிட நேரத்திற்கு நீண்ட வான வேடிக்கை நிகழ்ச்சியானது அல் மர்ஜன் தீவுக்கு (Al Marjan Island) அருகே கடலுக்கு மேலே பைரோடெக்னிக் டிஸ்ப்ளேயுடன் (pyrotechnic dipsplay) நான்கு கிலோமீட்டர் நீளத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.






