ADVERTISEMENT

அபுதாபி சிட்டிக்குள் போக்குவரத்து நெரிசலை எளிதாக்க “பார்க் & ரைடு” எனும் இலவச பேருந்து சேவை அறிமுகம்..!!

Published: 30 Dec 2020, 5:49 PM |
Updated: 31 Dec 2020, 5:53 AM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறையின் (Department of Municipalities and Transport – DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre – ITC) பொதுமக்களுக்கு ஒரு புதிய “பார்க் அண்ட் ரைடு (Park & Ride)” எனும் புதிய இலவச பயண சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய சேவை தனிநபர்கள் தங்களின் வாகனங்களை அபுதாபி தீவின் புறநகரில் உள்ள பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தவும், பொது பேருந்துகளைப் பயன்படுத்தி அபுதாபி நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இலவசமாக பயணிக்கவும் அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த “பார்க் அண்ட் ரைடு” சேவையை வரும் புதன்கிழமை 2021 ஜனவரி 2 முதல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் ITC அறிவித்துள்ளது.

இந்த புதிய சேவையானது “Darb” எனும் அபுதாபி டோல் கேட் சிஸ்டம் வரும் ஜனவரி 1 முதல் தொடங்கவிருப்பதை முன்னிட்டு பொதுமக்களின் பயண விருப்பங்களை வேறுபடுத்துதல், மாற்று போக்குவரத்து வழிகளை வழங்குதல், போக்குவரத்து நெரிசலின் மென்மையை மேம்படுத்துதல் மற்றும் அபுதாபி தீவிற்குள் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதன் விளைவாக அபுதாபி சிட்டிக்குள் பார்க்கிங் தேவையை குறைக்கவும் வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த இலவச பயண சேவைக்கு ஏதுவாக அபுதாபி தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கார் பார்க்கிங் மற்றும் பஸ் புறப்படும் இடங்களுக்கு ITC இலவச பேருந்து சேவையை இயக்கவுள்ளது. குறிப்பாக முசாஃபாவிற்கு (Mussafah) அருகாமையில் இருக்கும் முகமது பின் சயீத் நகரத்தில் (Mohamed Bin Zayed City – MBZ City) 500 பார்க்கிங் இடங்களும், அதே போன்று அல் ஷஹாமாவில் (Al Shahama) 500 பார்க்கிங் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த “பார்க் அண்ட் ரைடு” சேவைக்காக 104 மற்றும் 411 என்ற எண்களை கொண்ட இரண்டு பேருந்துகள் இலவச சேவைகளை வழங்கவுள்ளது. இதில் முதலாவது 104 என்ற எண் கொண்ட பேருந்து முகமது பின் சயீத் நகரத்தின் அல் ஹுவைம் (Al Huwaim) தெருவில் இருந்து சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் தெருவில் உள்ள அபுதாபி பெரிய பேருந்து நிலையம் (Abudhabi Main Bus Station), ஹஸ்ஸா பின் சயீத் தெருவில் உள்ள அல் வஹ்தா மால் (Al Wahdah Mall), ஷேக் ரஷீத் பின் சயீத் தெருவில் உள்ள எடிசலாட் கட்டிடம் (Etisalat) மற்றும் ஷேக் ரஷீத் பின் சயீத் தெரு மற்றும் கலீஃபா வீதிக்கு இடையிலான சந்திப்பில் அமைந்துள்ள கசர் அல் ஹோசன் (Qasr Al Hosn) உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். இந்த பேருந்தின் பயண நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.

ADVERTISEMENT

அதே போன்று 411 என்ற எண் கொண்ட பேருந்து ஷஹாமா F1 (Shahama F1) இடத்திலிருந்து சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் தெருவில் உள்ள அபுதாபி பெரிய பேருந்து நிலையம் (Abudhabi Main Bus Station), அல் தனாவில் உள்ள சுல்தான் பின் சயீத் தெருவில் இருக்கும் மரியம் பின்த் சயீத் மசூதி பார்க்கிங் (Maryam bint Saeed Mosque parking), அதே பகுதியில் அபுதாபி மத்திய தபால் நிலைய நிறுத்துமிடங்கள் (Abu Dhabi Central Post Office parking spaces) மற்றும் அல் தனாவில் உள்ள ஷேக் கலீஃபா மற்றும் சுல்தான் பின் சயீத் தெரு இடையேயானா சந்திப்பு (intersection) ஆகிய இடங்களுக்கு செல்லும். இந்த பேருந்தின் பயண நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.

இந்த பிரத்தியேக இலவச சேவைகள் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். போக்குவரத்து செரிசல் (peak hours) அதிகமான நேரங்களில் அதாவது காலையில் 6 மணி முதல் 9 மணி வரையிலும், அதே போன்று மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 20 நிமிட இடைவெளியில் பேருந்து சேவை இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் (peak hours) அதிகமில்லாத நேரங்களில் 60 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த இலவச பேருந்துகள் இயக்கப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் 58 முறை இவ்விரண்டு பேருந்துகள் இந்த பார்க் அண்ட் ரைடு சேவையில் இயங்கும். இந்த பேருந்துகளில் உடல் ரீதியான சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அடிப்படையில் ஒவ்வொரு பேருந்திலும் 24 இருக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

இந்த இலவச பேருந்தில் பயணிக்க ஒரு சேவை அட்டையும் (service card) மேலே குறிப்பிடப்பட்டிருந்த பிரத்தியேக கார் பார்க்கிங் இடங்களில் வழங்கப்படும். ஒரு சேவை அட்டையின் மூலம் ஒரு வாகனத்திற்கு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் என்ற அடிப்படையில் அதிகபட்சம் மூன்று நபர்கள் பேருந்துகளில் பயணிக்கலாம். இந்த சேவை அட்டை ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் (One Day Validity). மேலும் ஒரே நாளில் இந்த சேவை அட்டையை பயன்படுத்தி அபுதாபி சிட்டிக்குள் பலமுறை (unlimitedly) பயணிக்கலாம். இந்த சேவை அட்டை இல்லாமல் பயணம் செய்தால் DH200 அபராதமும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.