ADVERTISEMENT

அமீரகத்தில் வழங்கப்படும் சினோபார்ம் மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை போட பதிவு செய்வது எப்படி..!!

Published: 15 Jan 2021, 11:13 AM |
Updated: 15 Jan 2021, 11:15 AM |
Posted By: admin

கொரோனாவின் பாதிப்பானது உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி 3000 க்கும் அதிகமானோர் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த மாதம் கொரோனாவிற்கான தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமீரகத்தில் இரு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. முதலில் சினோபார்ம் தடுப்பூசியை (Sinopharm vaccine) நாடு முழுவதும் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்தது. அதன் பின்னர் துபாயில், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி (Pfizer-BioNTech vaccine) வழங்கப்பட்டு வருகிறது.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி…

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி துபாயில் உள்ள அல் சஃபா ஆரம்ப சுகாதார மையம், ஜபீல் ஆரம்ப சுகாதார மையம், அல் மிஷார் ஆரம்ப சுகாதார மையம், நாத் அல் ஹம்ர் ஆரம்ப சுகாதார மையம், அல் பார்ஷா ஆரம்ப சுகாதார மையம், அப்டவுன் மிர்திஃப் மருத்துவ உடற்தகுதி மையம் மற்றும் ஹத்தா மருத்துவமனை ஆகிய சுகாதார மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள், முன்னணி சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய துறைகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் அளிக்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

தடுப்பூசிக்கு நான் எவ்வாறு பதிவு செய்வது…?

துபாயில் வழங்கப்படும் ஃபைசர்-பயோஎன்டெக் எனும் இந்த தடுப்பூசியானது துபாயில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய துபாய் சுகாதார மையத்தின் (Dubai Health Authority – DHA) மருத்துவ பதிவு எண் (Medical Record Number – MRN) தேவை. இந்த பதிவு எண்ணை பெறுவதற்கு DHA ன் இணையதளத்தில் உங்கள் எமிரேட்ஸ் அடையாள எண்ணைச் (Emirates ID Number) சமர்ப்பித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

துபாய் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே DHA ன் இணையதளத்தில் பதிவு செய்து மருத்துவ பதிவு எண்ணை பெற்றுக்கொள்ளமுடியும். அமீரகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பெறப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் பதிவு எண்ணை பெறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கோவிட் -19 தடுப்பூசி அப்பாயிண்ட்மெண்ட் எவ்வாறு பதிவு செய்வது?

உங்களிடம் MRN எண் கிடைத்ததும், DHA அப்ளிகேஷன் மூலம் அல்லது 800342 என்ற அதன் கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம். மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பதிவு செய்ய DHA அக்கவுண்ட் அல்லது ஐக்கிய அரபு அமீரக பாஸ் எண் (UAE Pass number) தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 தடுப்பூசி பெற வேண்டி அப்ப்ளிகேஷனில் கிளிக் செய்த பிறகு, தடுப்பூசியைப் பெறுவதற்கான உங்கள் தகுதியை நிர்ணயிக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து, உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் அருகிலுள்ள சுகாதார மையத்தில் முன்பதிவு செய்யப்படும். மேலும் இதனை உறுதிப்படுத்த உங்களின் அதிகாரபூர்வ மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும். மேலும் தடுப்பூசி போடுவதற்கு முன்பு அனைவரும் அந்த ஒப்புதல் படிவத்தைப் படிக்க வேண்டும்.

தடுப்பூசி மையங்களின் செயல்படும் நேரங்கள்…

துபாயில் அல் சஃபா ஆரம்ப சுகாதார மையம், ஜபீல் ஆரம்ப சுகாதார மையம், அல் மிஹார் ஆரம்ப சுகாதார மையம், அல் பர்ஷா ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அப்டவுன் மிர்திஃப் மருத்துவ உடற்தகுதி மையம் ஆகிய மையங்களில் காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கப்படும்.

மற்ற இரு மையங்களான நாத் அல் ஹம்ர் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் ஹத்தா மருத்துவமனையில் 24 மணிநேரமும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினோபார்ம் தடுப்பூசி…

ஐக்கிய அரபு அமீரக அரசால் பரிந்துரைக்கப்பட்டு அனைவர்க்கும் வழங்கப்பட்டு வரும் சினோஃபார்ம் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் 152 க்கும் மேற்பட்ட மையங்களில் கிடைக்கிறது. வயதான குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான வேண்டுகோளின் பேரில் அவர்களின் வீட்டிற்கே சென்றும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி அபுதாபியின் பொது சுகாதார ஆபரேட்டர் SEHA நடத்தும் அனைத்து கிளினிக்குகளிலும், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் மையங்களிலும் மற்றும் பல தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் சுகாதார மையங்களில் முன் அனுமதி பெறாமலேயே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். ஆனால் தடுப்பூசி மையங்கள் மற்றும் டிரைவ்-த்ரூ மையங்களுக்கு முன் அனுமதி தேவை. அதே போன்று தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முன் அனுமதி தேவை. SEHA மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு SEHA அப்ளிகேஷனில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.