ADVERTISEMENT

4 இந்திய சிறுவர்களின் உடல் துபாயில் நல்லடக்கம்: சக்கர நாற்காலியில் வந்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட தந்தை!! இதயத்தை நொறுக்கும் காட்சி என வேதனை….

Published: 6 Jan 2026, 6:51 PM |
Updated: 7 Jan 2026, 1:08 PM |
Posted By: Menaka

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்திய சிறுவர்கள், செவ்வாய்க்கிழமை மதியம் துபாயின் முஹைஸ்னாவில் உள்ள அல் குசைஸ் கல்லறையில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

கேரளாவைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் மற்றும் ருக்ஷானா ஆகியோரின் நான்கு மகன்களையும் நல்லடக்கம் செய்ய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால், இறுதிச் சடங்கு ஆழ்ந்த துக்கத்தால் நிறைந்திருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவர்களின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயங்களிலிருந்து மீண்டு வரும் தந்தை, சக்கர நாற்காலியில் வந்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நிகழ்வு பலரையும் கண்ணீர்க்கடலில் ஆழ்த்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கூட்டு நல்லடக்கத்தை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. அங்கு இருந்த அனைவருக்கும் அது இதயத்தை நொறுக்கும் காட்சியாக இருந்தது” என்று ஒரு சமூக சேவகர் வேதனையுடன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

அபுதாபியில் நடந்த ‘Liwa Festival’-ல் கலந்துகொண்டு குடும்பத்தினர் துபாய்க்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

வாகனம் விபத்துக்குள்ளானபோது, ​​மூன்று சகோதரர்களான அஷாஸ் (14), அம்மார் (12), மற்றும் அய்யாஷ் (5) ஆகியோரும், அந்தக் குடும்பத்தின் வீட்டுப் பணியாளரான புஷ்ரா ஃபயாஸ் யாஹு (49) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நான்காவது குழந்தையான அஸ்ஸாம் (7) படுகாயமடைந்து அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தில் உயிர் தப்பிய பெற்றோரும், உயிருடன் இருக்கும் ஒரே குழந்தையான இஸ்ஸாவும் (10) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இஸ்ஸாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மத்தியில், நான்கு மகன்களையும் இழந்த செய்தியைப் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்துல் லத்தீஃபிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாமதமாக இந்த மரணங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டதாகவும், காயமடைந்த கைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ருக்ஷானாவிடம், ஒரு மனநல ஆலோசனைக் குழுவால் செவ்வாய்க்கிழமை அன்றுதான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் உறவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர

இறுதி அஞ்சலி

சிறுவர்களின் சடலங்கள் துபாய்க்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, துக்கத்தில் இருந்த பெற்றோரும் இஸ்ஸாவும் மருத்துவமனையில் குழந்தைகளை கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரு இடங்களிலும் அவர்களுக்காக ஜனாசா தொழுகை எனும் இறுதி தொழுகை நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், நான்கு சகோதரர்களும் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டனர். புஷ்ராவின் உடல் திங்கட்கிழமை இரவு கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது, மேலும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் அடக்கம் செய்ய சிறப்பு அனுமதி

குடும்பத்தினரின் ரெசிடென்ஸ் விசாக்கள் ராஸ் அல் கைமாவில் வழங்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளை துபாயில் அடக்கம் செய்ய துபாய் அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

“வழக்கமாக, விசா வழங்கப்பட்ட எமிரேட்டில்தான் அடக்கம் செய்யப்படும். ஆனால் அந்தக் குடும்பம் துபாயில் வசிப்பதாலும், அவர்களது உறவினர்கள் இங்கு இருப்பதாலும், அதிகாரிகள் இந்த செயல்முறையை விரைவுபடுத்தினர்,” என்று ஒரு சமூக ஆர்வலர் கூறியதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஒரே இரவில் மாறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கை

அப்துல் லத்தீஃப் ராஸ் அல் கைமாவில் தொழில் செய்து வருகிறார், அதே சமயம் ருக்ஸானா துபாயில் ஒரு சொத்து ஆலோசகராகப் பணிபுரிகிறார். அவர்களது ஐந்து குழந்தைகளும் அவர்களின் வாழ்க்கையின் மையமாக இருந்தனர்.

குளிர்கால விடுமுறையின் போது அந்தக் குடும்பம் நண்பர்களுடன் லிவாவுக்குப் பயணம் செய்திருந்தது. மற்றவர்கள் அபுதாபியில் தங்கியிருந்த நிலையில், குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதற்கான முதல் நாளுக்குத் தயாராவதற்காக பெற்றோர்கள் முன்கூட்டியே வீடு திரும்புவது என்று முடிவு செய்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் “அது அன்பினாலும் பொறுப்புணர்வினாலும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அது இத்தகைய சோகத்தில் முடியும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது,” என்று ஒரு குடும்ப உறுப்பினர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் இந்த விபத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கேரளப் புலம்பெயர் சமூகத்தை ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த கடினமான நேரத்தில் அந்த குடும்பத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். அந்தக் குழந்தைகள் துபாயில் உள்ள பிரிட்டிஷ் பாடத்திட்டப் பள்ளியான அரபு யூனிட்டி பள்ளியில் பயின்று வந்தனர், அந்தப் பள்ளியும் இந்த இழப்பு குறித்து அதிர்ச்சியையும் துயரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel