2026-ஆம் ஆண்டு ரமலான் மாதம் நெருங்கி வருவதால், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் வேலை நேரத்தைக் குறைப்பதாக அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இது பெரும்பாலான தனியார் துறை முதலாளிகளுக்கு மத்திய தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வத் தேவை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்கள் ரமலான் மாதத்தில் குறைக்கப்பட்ட வேலை நாட்களுக்குத் தகுதியுடையவர்கள், மேலும் இதைக் கடைப்பிடிக்கத் தவறினால் நிறுவனங்கள் அபராதம், கூடுதல் நேர ஊதியக் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் தகராறுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடமை ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் கட்டமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், “ரமலான் மாதத்தில் வேலை நேரம் என்பது முதலாளியின் விருப்பத்திற்கு விடப்படவில்லை, ரமலான் வேலை நேரங்கள் நிர்வாக விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை சட்டம் தெளிவுபடுத்துகிறது.” என்றும் சட்ட வல்லுனர்கள் 2021-ஆம் ஆண்டின் மத்திய ஆணை-சட்டம் எண் 33-ஐ மேற்கோள் காட்டி கூறுகின்றனர்.
2022-ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண் 1-இன் படி, தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலான் மாதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வேலை நேரம் கட்டாயமாகக் குறைக்கப்பட வேண்டும். இந்த விதி மதம் அல்லது அவர்கள் நோன்பு இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
மேலும், ரமலான் மாதத்தில் வேலை நேரத்தைக் குறைக்கத் தவறினால், அது தொழிலாளர் சட்டத்தை மீறியதாகக் கருதப்படும் என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிறுவனங்கள் வேலை நேரத்தைக் குறைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
முதலாளிகள் ரமலான் மாதத்தில் வழக்கமான வேலை நேரத்தைத் தொடர்ந்தால், அவர்கள் MoHRE-இடம் இருந்து அபராதம் உட்படத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். தண்டனைகளின் தீவிரமானது, அந்த மீறல் எவ்வளவு காலம் நீடிக்கிறது மற்றும் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்றும் கூறப்படுகிறது.
இவை தவிர, நிறுவனங்கள் ஊழியர்களிடம் நிதி விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், குறைக்கப்பட்ட ரமலான் நேரங்களுக்கு அப்பால் செய்யப்படும் எந்த வேலையும் சட்டப்பூர்வமாக கூடுதல் நேரமாகவே கருதப்படும். அந்தக் கூடுதல் நேரங்களுக்கு ஊழியரின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அமீரகத்தைப் பொறுத்தவரை, ரமலான் மாதத்தில், குறைக்கப்பட்ட வேலை நாள் சட்டப்பூர்வமான விதிமுறையாகிறது. பகல் நேரக் கூடுதல் நேரத்திற்கு சாதாரண மணிநேர ஊதியத்தை விட குறைந்தபட்சம் 25 சதவீதம் அதிகமாகவும், இரவு நேரக் கூடுதல் நேரத்திற்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாகவும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட ஓய்வு நாளில் வேலை செய்தால், அதற்கு ஒரு நாள் விடுமுறை அல்லது கூடுதல் ஊதியம் மூலம் ஈடுசெய்யப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.
மேற்கூறிய விதிமுறைகளின் படி, தங்கள் உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் ஊழியர்கள் MoHRE-இடம் புகார்களைப் பதிவு செய்யலாம். பணி இடங்களை ஆய்வு செய்யவும், திருத்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிடவும் MoHRE-க்கு அதிகாரம் உள்ளது.
ஏதேனும் விதிவிலக்குகள் உள்ளதா?
இந்த விதி நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு பரவலாகப் பொருந்தினாலும், சில விதிவிலக்குகள் உள்ளன. சில மூத்த நிர்வாகிகள், வாரிய உறுப்பினர்கள், கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் தொடர் ஷிஃப்ட் பணிகளில் உள்ள ஊழியர்கள் நிர்வாக விதிமுறைகளின் கீழ் விலக்கு பெறலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
DIFC மற்றும் ADGM போன்ற மண்டலங்களில் செயல்படும் நிறுவனங்கள் தனி தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, DIFC-யில், ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பொதுவாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை, அதே சமயம் முஸ்லிம் அல்லாத ஊழியர்கள் வழக்கமான வேலை நேர விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இதேபோல், அரசு நிறுவனங்களும் தனி விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
பல நிறுவனங்கள் ஏன் முன்கூட்டியே திட்டமிடுகின்றன?
பல நிறுவனங்கள் இப்போது ரமலான் கால அட்டவணையை சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், ஊழியர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதற்காகவும் முன்கூட்டியே திட்டமிடுகின்றன.
ரமலான் காலத்தில் குறைக்கப்படும் வேலை நேரம், நோன்பு மற்றும் தூக்கக் குறைபாட்டால் ஏற்படும் சோர்வைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
ஊழியர்களின் கருத்து
ஊழியர்களைப் பொறுத்தவரை, குறைக்கப்பட்ட வேலை நேரம் என்பது அவர்களுக்கு ஒரு சட்டப்பூர்வ சலுகையை விடவும் தனிப்பட்ட தேவையாக உள்ளது. குறிப்பாக, கட்டுமானத் துறை ஊழியர்கள் குறைந்த வேலை நாட்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் ஊழியர்கள் மட்டுமின்றி, முஸ்லிம் அல்லாத ஊழியர்களும் தாங்கள் பயனடைவதாகக் கூறுகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத ஊழியர் ஒருவர், ரமலான் கால அட்டவணைகள் ஒரு அமைதியான மற்றும் புரிதல் நிறைந்த பணியிடத்தை உருவாக்குவதாகவும், நாங்கள் நோன்பு நோற்காவிட்டாலும், நாங்கள் வழக்கமாக சீக்கிரம் வேலையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறோம் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, ரமலான் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான தனியார் துறை முதலாளிகளுக்கு குறைக்கப்பட்ட வேலை நேரம் ஒரு விருப்பத் தேர்வு அல்ல என்று சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இது சரியாகப் பயன்படுத்தப்படும்போது, இந்த கொள்கை சட்ட இணக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நல்வாழ்வு, உற்பத்தித்திறன் மற்றும் அனைவருக்கும் ஒரு சமநிலையான பணியிடத்தையும் ஊக்குவிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel