அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் வெடித்தைதைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் உள்ள பயணிகள், அதிக விமானக் கட்டணங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சமீப நாட்களில் பிராந்தியம் முழுவதும் விமானக் கட்டணங்கள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர், புவிசார் பதட்டங்களுக்கு மத்தியில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக கடந்த வாரம் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் விலைகளின் உயர்வு ஜெட் எரிபொருளின் விலையையும் உயர்த்தியுள்ளது, இது பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் மொத்த இயக்கச் செலவுகளில் மூன்றில் ஒரு பங்காகும்.
இதன் விளைவாக, பல பிராந்திய மற்றும் ஆசிய விமான நிறுவனங்கள் புதிய எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளன அல்லது ஏற்கனவே உள்ளவற்றை அதிகரித்துள்ளன, இது வரவிருக்கும் ஈத் அல்-ஃபித்ர் பயண காலத்திற்கு முன்னதாக டிக்கெட் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் GCC முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் முக்கிய சர்வதேச இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன, இருப்பினும் அதிக இயக்க செலவுகள் காரணமாக விலை நிர்ணயம் அழுத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரபலமான வழித்தடங்களில் கட்டணங்கள் உயர்வு
விமான ஆய்வாளர் ‘StrategicAero Research’ இன் சஜ் அஹ்மத் அவர்களின் கூற்றுபடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய சர்வதேச வழித்தடங்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க கட்டண உயர்வைக் கண்டுள்ளன.
குறிப்பாக, துபாயில் இருந்து இந்திய நகரங்கள் உட்பட குறிப்பிட்ட வழித்தடங்கள் மிகப்பெரிய விலை உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் எகானமி-வகுப்பு கட்டணங்கள் 10 முதல் 20 சதவீதம் வரை உயரக்கூடும், அதே நேரத்தில் ஒட்டுமொத்த விமான கட்டண உயர்வுகள் சுமார் 30 சதவீதம் அல்லது அதற்கு மேல் அடையக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளிலிருந்து சர்வதேச பயணங்களைத் திட்டமிடும் பயணிகள், வரும் வாரங்களில் அதிக கட்டணங்களையும், குறைந்த இருக்கைகள் கிடைப்பதையும் எதிர்பார்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel