ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமீரகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியும் கொரோனாவிற்கெதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அபுதாபியில் திரையரங்குகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அபுதாபியில் மீண்டும் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை குறைந்த அளவிலேயே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட கொரோனாவிற்கெதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாகப் பின்பற்றி திரையரங்குகள் 30 சதவீத திறனில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, தியேட்டர்கள் ஏற்கனவே இன்று (சனிக்கிழமை) முதல் டிக்கெட் முன்பதிவை மீண்டும் தொடங்கியுள்ளன. VOX சினிமாஸ் அபுதாபி மற்றும் அல் அய்னில் திரையரங்குகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. அதே போல் சினி ராயல் (Cine Royal) அபுதாபியில் இருக்கக்கூடிய அனைத்து மால்களிலும் குறைந்த திறனில் முன்பதிவை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
அபுதாபியில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி 5, 2021 முதல் திரை அரங்குகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.