அமீரக செய்திகள்

அமீரகத்தில் வரவிருக்கும் உலகின் மிக உயரமான ‘ரூஃப் டாப் பீச்’..!! 2026ஆம் ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்படும் எனத் தகவல்…

ஐக்கிய அரபு அமீரகம் அதன் வானுயர் கட்டிடங்கள், கிராண்ட் மசூதிகள், பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் போன்றவற்றிற்கு புகழ்பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதுவரை ஏராளமான உலக சாதனைகளை முறியடித்துள்ள அமீரகம், இன்னும் பல்வேறு வரலாற்று சாதனைகளை முறியடிக்க பல மில்லியன் திர்ஹம்ஸ் நிதியை செலவு செய்து உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்தவகையில், தற்பொழுது ராஸ் அல்-கைமாவில் உள்ள அல் மர்ஜான் தீவில் உலகின் மிக உயரமான முதல் கூரை கடற்கரை (rooftop beach) கட்டப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் மேஜர் டெவலப்பர்ஸ் (Major Developers) என்ற நிறுவனம், சுமார் 1 பில்லியன் திர்ஹம் செலவில் உலகின் முதல் ரூஃப் பீச் உட்பட ராஸ் அல்-கைமாவில் உள்ள அல் மர்ஜான் தீவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து மேஜர் டெவலப்பர்ஸின் CEO ஆண்ட்ரே சரபெனாக் (Andrei Charapenak) அவர்கள் கூறுகையில், அமீரகத்தில் தங்கள் நிறுவனம் தொடங்கும் ஒவ்வொரு திட்டத்திலும் ஒரு உலக சாதனையை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, இந்த ரெசிடென்ஷியல் ஃப்ரீஹோல்ட் திட்டம் 400 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்படும் என்றும், அதில் 450 ஹவுசிங் யூனிட்கள் 1.2 மில்லியன் திர்ஹம்களில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “ராஸ் அல் கைமாவில் முதலீடு செய்வதற்கான சரியான நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் ராஸ் அல் கைமாவில் உள்ள மர்ஜன் தீவில் வின் ரிசார்ட் (Wynn Resort) திறக்கப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வரவை எமிரேட் காணும்” என்று கூறியுள்ளார்.

அதாவது, அமெரிக்க கேமிங் ஆபரேட்டர் Wynn Resort அல் மர்ஜான் ஐலேண்டுக்கு வருவதால், இத்திட்டத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக சரபெனாக் கூறியுள்ளார்.

குறிப்பாக, இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் முதலீட்டாளர்கள் திட்டம் முடியும் வரை தங்கள் முதலீடுகள் 70 சதவீதம் வரை உயர்வதைக் காணலாம் என்று தெரிவித்த அவர், இது உலகளவில் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீட்டாளர்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த வருமானங்களில் ஒன்றாகும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க கேமிங் ரிசார்ட் திறக்கப்பட்ட பிறகு, வடக்கு எமிரேட்டுக்கு 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று ராஸ் அல் கைமா அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதே நேரத்தில் ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விநியோகம் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் விளைவு, அல் மர்ஜான் தீவில் உள்ள சொத்துக்களின் தேவை மற்றும் விலைகள் வரும் ஆண்டுகளில் பாரிய அளவில் உயரும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தவிர, எமிரேட்டில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் இறுதிப் பயனர்களிடமிருந்து அதிகரித்து வரும் குடியிருப்பு சொத்துக்களுக்கான தேவையைப் பணமாக்குவதற்காக துபாயில் எதிர்காலத்தில் மற்றொரு திட்டத்தைத் தொடங்கவும் சரபெனாக் திட்டமிட்டுள்ளார்.

ராஸ் அல் கைமா அமீரகத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் கணிசமான பகுதியைக் கைப்பற்றும் என்றும், அதன் மூலோபாய இருப்பிடம், விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றால் இது ஆதரிக்கப்படும் எனவும் மேஜர் டெவலப்பர்களின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி நரேன் விஷ் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!