அமீரக செய்திகள்

அமீரகத்தை நெருங்கி வரும் தீவிர கனமழை.. இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும்.. வரைபடத்தை வெளியிட்ட புயல் மையம்..!!

அமீரகத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நேற்றிரவு முதல் அபுதாபியின் மேற்கு பகுதிகளான அல் சிலா, அல் ருவைஸ் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. மேலும் அதிகாலை 3 மணியளவில் தொடங்கி அபுதாபி சிட்டி, முஸாஃபா ஆகிய இடங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது.

அதேபோன்று, துபாயிலும் அதிகாலை 4 மணியிலிருந்து இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்துள்ளது. குறிப்பாக ஜெபல் அலி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாக குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமீரகத்தில் பரவலாக பெய்து வரும் மழையானது இன்னும் சில மணி நேரங்களில் தீவிர கனமழையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று காலை 6 மணி நிலவரப்படி, கனமழையை பொழியக்கூடிய மேகக்கூட்டங்கள் நாட்டின் உட்புற பகுதிகளை நோக்கி வருவதாகவும் அமீரகத்தின் புயல் மையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து புயல் மையம் தனது X தள பக்கத்தில் பகிரந்துள்ள வரைபடத்தின்படி, தீவிர தன்மையுடன் கூடிய கனமழையானது படிப்படியாக அபுதாபியின் மேற்கு பகுதியிலிருந்து அபுதாபியின் மையப்பகுதி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா என அமீரகத்தின் அனைத்து எமிரேட்களுக்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அதிகாலை பெய்த கனமழையின் காரணமாக அமீரகத்தின் மலைப்பகுதிகளிலும் சாலைகளிலும் அருவி போல் வெள்ளம் வழிந்தோடுகிறது. மேலும் பள்ளத்தாக்குகளிலும் நீரோடைப் பகுதிகளிலும் வெள்ளநீர் வழிந்தோடும் வீடியோக்களையும் புயல் மையம் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகளின்றி குடியிருப்பாளர்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், வெளியில் செல்ல தேவையிருப்பவர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் அமீரக குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!