ஸ்விட்சர்லாந்தின் உயரமான மலையில் ஒளிர்ந்த இந்திய மூவர்ணக் கொடி..!!! கொரோனாவிற்கு எதிரான ஒற்றுமையின் வெளிப்பாடாக காட்சிப்படுத்தல்…!!!
இந்திய நாட்டின் மூவர்ண கொடியானது சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல மேட்டர்ஹார்ன் மலையின் உச்சியில் ஒளிரப்பட்டிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கொரோனா வைரஸின் தற்போதய சூழ்நிலையில் அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக மேட்டர்ஹார்ன் மலையில் இந்திய கொடி ஒளியால் வண்ணமயமாக தென்பட்ட காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய செய்தி நாளிதழான இந்தியா டுடேயின் கட்டுரையின் படி, சுவிஸ் நாட்டின் ஒளி கலைஞர் ஜெர்ரி ஹோஃப்செட்டர், 4,478 மீட்டர் உயரம் கொண்ட மேட்டர்ஹார்ன் மலையின் உச்சியில் பல்வேறு நாடுகளின் கொடிகளை காட்சிப்படுத்தி வருவதாகவும் அதன் மூலம் கொரோனவை எதிர்த்து போராடும் நாடுகளுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை வழங்குவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேட்டர்ஹார்ன் மலையானது மிகவும் உயரமான புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியாகும். மேலும் இது சுவிட்சர்லாந்திற்கும் இத்தாலிக்கும் இடையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூவர்ணத்தில் ஒளிந்த இந்திய கொடியின் புகைப்படம் ஜெர்மாட் மேட்டர்ஹார்னின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி ஜெர்மாட் மேட்டர்ஹார்னின் சுற்றுலா அமைப்பின் சார்பாக பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில் உள்ள சவால்கள் மகத்தானவை. மேட்டர்ஹார்னில் ஒளிரும் இந்திய கொடியின் மூலம் அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையையும் பலத்தையும் அளிக்கும் நோக்கத்திலும், அவர்களோடு நாங்கள் கொண்டிருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்திய கொடி ஒளிரப்பட்டதாக” அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மூவர்ண கொடி 1000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட மலையின் உச்சியில் ஒளிர்வதை காணும்போது கண்கொள்ளா காட்சியாகவே இருந்தது. எனினும் அது ஒளிரப்பட்ட நோக்கம் நிறைவேற நாம் அனைவரும் இந்தியர்களாய் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றிபெற அனைவரும் ஒன்றாய் முயற்சிப்போம்.