கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய வகை “மெடிக் ரோபோட்”..!! சவுதி அரேபியாவில் புதிய முயற்சி..!!

வளைகுடா நாடுகளில் புதிய முயற்சியாக சவூதி அரேபியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புதிய வகை “மெடிக் ரோபோட்” பயன்படுத்தப்படுகிறது. சவூதி அரேபியா நாட்டின் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்லா மருத்துவ வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த மெடிக் ரோபோட், உயிர்கொல்லி வைரஸான கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு பரிசோதனை செய்து நோய்களை கண்டறியும் வல்லமை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோவைப் பயன்படுத்துவதன் மூலம், சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற நோயாளிகளிடையே கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவுவதை தடுக்க முடிவதாகவும் அதே நேரத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற தடுப்பு மருத்துவப் பொருட்களின் பங்குகளைப் பாதுகாத்துக்கொள்ள உதவுவதாகவும் மருத்துவமையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மெடிக் ரோபோட்டில் ஸ்டெதாஸ்கோப், ஓட்டோஸ்கோப், கண் கேமரா, தொலைதூரத்திலிருந்து தோலை ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த அதிக தெளிவுத்திறன் கொண்ட லென்ஸ் பொருத்திய கேமரா போன்ற மருத்துவ சாதனங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும் கிங் அப்துல்லா மருத்துவ வளாகத்தின் பொது மேற்பார்வையாளர் டாக்டர் காலித் அல் துமாலி தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது, அவர்களின் முக்கிய அறிகுறிகளை ஆராய்வது, ரேடியோகிராஃப் படங்களை தயாரிப்பது, மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் நோயாளியின் கோப்புகளைச் சரிபார்ப்பது உள்ளிட்ட கொரோனா தொடர்பான நோயறிதல்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பான தூரத்திலிருந்து வேலை செய்வதற்கு தேவையான பிற கருவிகளையும் இந்த ரோபோட் உடன் எடுத்து செல்லும் என்றும் அவர் கூறினார்.
டாக்டர் காலித் அல்-துமாலி மேலும் கூறுகையில், இந்த மெடிக் ரோபோட் தொழில்நுட்பம் பரிசோதனைகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்கு தானாகவே செல்லக்கூடிய வகையிலும், அறையை விட்டு வெளியேறிய பின் ரோபோட் சென்ற இடங்களை தானாகவே சுத்திகரித்துக்கொள்ளும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.