அமீரகத்தில் நடைபெறவிருக்கும் IPL-2020 க்கான கால அட்டவணை வெளியீடு..!! தொடக்க ஆட்டத்தில் CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதல்..!!
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் வெகு விமரிசையாக நடத்தப்படும் IPL (Indian Premier League) போட்டிகளானது இந்த வருடம் கொரோனாவின் தாக்கத்தினால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் தற்பொழுது வரையிலும், கொரோனாவின் பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து வருவதால் IPL போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி, செப்டம்பர் மாதம் போட்டிகள் துவங்கும் என IPL நிர்வாகம் சார்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்த வருடத்திற்கான IPL கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ள IPL 2020 இன் தொடக்க ஆட்டத்தில் 2019 ம் ஆண்டு IPL போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மோதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
IPL-2020 போட்டிகளானது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் விளையாடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, இந்த வருடத்திற்கான IPL போட்டிகளில் 24 போட்டிகள் துபாயிலும் 20 போட்டிகள் அபுதாபியிலும் 12 போட்டிகள் ஷார்ஜாவிலும் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம் வந்து தங்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த உறுப்பினர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் CSK அணி மட்டும் கூடுதல் நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe