ADVERTISEMENT

சென்னை ஏர்போர்ட்டின் ஓடுபாதையில் இருந்த அமீரக விமானத்தில் இருந்து வெளியே குதித்த நபர்..

Published: 3 May 2026, 7:01 PM |
Updated: 3 May 2026, 7:06 PM |
Posted By: admin

அமீரகத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமான நிலையத்தில் இன்று (மே 3, ஞாயிற்றுக்கிழமை) பயணி ஒருவர் மேற்கொண்ட செயலானது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அமீரகத்தில் இருந்து இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில், பயணி ஒருவர் அவசரகால வெளியேறும் கதவைத் (emergency exit) திறந்து ஓடுபாதையில் குதித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அதிகாலை 3.25 மணிக்கு விமான நிலைய அதிகாரிகள் பிரதான ஓடுபாதையை (07/25) மூடினர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் விமான தாமதங்கள் மற்றும் ஒரு விமானம் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதால், விமான நிலையத்தில் சிறிது நேர செயல்பாட்டு இடையூறு ஏற்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர்பஸ் A320 ரக விமானம் G9 471, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.23 மணியளவில் தரையிறங்கியது. விமானம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஷார்ஜாவிலிருந்து பயணித்த 29 வயதான முகமது ஷெரீப் முகமது நஜ்முதீன் என கூறப்படும் நபர் திடீரென அவசரகால வெளியேறும் கதவைத் திறந்து, அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் வெளியே குதித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதனையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அந்தப் பயணியைத் துரத்திச் சென்று ஓடுபாதையிலேயே பிடித்துள்ளனர். அவர் குதித்ததில் அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன என்றும் விசாரணைக்காகப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பயணியிடம் சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்தப் பயணி, தனக்கு உடல்நிலை சரியில்லாததால் விமானத்திலிருந்து குதித்ததாக தெரிவித்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அமைப்புகள் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து அதிகாலை 4.35 மணியளவில் ஓடுபாதை செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.