துபாயின் பரபரப்பான ஒரு தெருவில், ஒரு பேருந்து ஓட்டுநரின் செயலானது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) பேருந்து ஓட்டுநரான நயீம் அப்பாஸ் முஹம்மது என்பவர், ஒரு பேருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் பார்வையற்ற ஒருவர் சிரமப்படுவதைக் கண்டதும் பேருந்தை நிறுத்தி, பேருந்தை விட்டு வெளியே இறங்கி, மென்மையாக அந்த நபரின் கையைப் பிடித்து, அவரைப் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவி புரிந்துளார். அவரின் இந்த செயலே அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.
இதுபற்றிக் கேட்டபோது, முஹம்மது “ஒருவர் சாலையைக் கடக்க முயன்றதை நான் பார்த்தேன், அவர் பார்வையற்றவர். எனவே நான் அவருக்கு உதவினேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து RTA அந்தத் தருணத்தின் காணொளியைப் பகிர்ந்ததுடன் அவரது செயல்களை அங்கீகரிக்கும் விதமாக, RTA-வின் பொது இயக்குநரும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தார் அல் டாயருடன் இணைந்து, முஹம்மதுவுக்கு அந்த ஆணையத்தால் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவரின் செயல் போன்றே இதுபோன்ற பல தருணங்கள், துபாயயை பெருமிதம் கொள்ளும் ஒரு நகரமாக, இன்னும் பெரிய ஒன்றாக உருவாக்குகின்றன.