அமீரக செய்திகள்

சுற்றுலா, விசிட் விசாவில் துபாய் வர ஐந்து நாட்டவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடா..? GDRFA அதிகாரியின் விளக்கம்..!!

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களில் துபாய் வரும் பயணிகளுக்கு நுழைவு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்த செய்திகளுக்கு தற்போது GDRFA மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 13 ம் தேதி முதல் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சுற்றுலா விசா வைத்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் தகுதியற்ற வேலை தேடுபவர்கள் என்றும், போலியான ரிட்டர்ன் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவு கொண்டிருந்தவர்கள் என்றும் GDRFA விளக்கமளித்துள்ளது.

துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த GDRFA அதிகாரி ஒருவர் கூறுகையில், துபாய்க்கு சுற்றுலா விசாவில் வந்த பயணிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பணம் செலுத்துவதற்கான வழி அவர்களிடம் இல்லை என்று வருகை முனையத்தில் (Arrival Terminal) இம்மிகிரேஷன் அதிகாரிகளால் நடத்தப்பட்ட முழுமையான விசாரணையில் கண்டறியப்பட்ட பின்னரே அப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று GDRFA வின் விமான நிலைய பாஸ்போர்ட் விவகாரத் துறையின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் தலால் அகமது அல்ஷாங்கெட்டி தெரிவித்துள்ளார்.

“அனைத்து பயணிகளும் இம்மிகிரேஷன் அதிகாரிகளால் Arrival Terminal-ல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் பலர் துபாயைப் பார்க்கவும் உறவினர்களைப் பார்க்கவும் வந்த சுற்றுலாப் பயணிகள் என்று கூறினர். எங்கள் விசாரணையின் பின்னர், அவர்களின் ஹோட்டல் முன்பதிவுகள் போலியானவை அல்லது ரத்து செய்யப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது. மேலும் எங்கள் அதிகாரிகள் ஹோட்டல்களை அழைத்து சரிபார்க்கையில் அவர்கள் செய்திருந்த முன்பதிவு போலியானது என்பது தெரியவந்தது” எனவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் “விமான நிலையத்தில் சிக்கித்தவித்த பயணிகள் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்ல. அவர்கள் வேலை தேடி வந்தவர்கள். தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வழியும் இல்லாமல் அவர்கள் இங்கு வந்தார்கள். அவர்களிடம் போக்குவரத்திற்கு கூட பணம் இல்லை. மேலும் இம்மிகிரேஷன் படிவங்களை கூட வேலை தேடி வந்த அவர்களில் பலரால் படிக்க முடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் சுற்றுலா விசாவில் வந்தவர்களில் முறையான ஆவணங்களைக் காட்டியவர்கள் துபாய்க்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் அல்ஷாங்கெட்டி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக விதிகள் அனைத்து நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் அது குறிப்பிட்ட ஐந்து நாடுகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகள் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றால், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியாது. இந்தக் கொள்கைகள் துபாய்க்கு மட்டுமல்ல, இவை சர்வதேச பயண நடைமுறைகள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் துபாய்க்கு விசிட் அல்லது சுற்றுலா விசாவில் வருபவர்கள் தங்களிடம் 2,000 திர்ஹம்ஸ் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று வெளிவந்திருந்த செய்திகளுக்கு பதிலளித்த அவர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு முன்னர் பயணிகள் தங்கள் வங்கிக் கணக்கை அல்லது நிதி பதிவுகளைக் காட்டுமாறு கட்டளையிடும் எதையும் GDRFA வெளியிடவில்லை என்றும் அல்ஷாங்கெட்டி கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!