வெளிநாட்டில் வசிக்கும் இருப்பிட முகவரியையும் இந்திய பாஸ்ப்போர்ட்டில் சேர்த்து கொள்ளலாம்..!! இந்திய அரசு அனுமதி..!!

உலகெங்கிலும் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டுகளில் வெளிநாடுகளில் தாங்கள் தங்கியிருக்கும் இருப்பிடங்களின் முகவரிகளை சேர்த்துக்கொள்ள விருப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதரக பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு அதிகாரி சித்தார்த்த குமார் பரெய்லி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிரந்தர அல்லது செல்லுபடியாகும் முகவரிகள் இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக, வெளிநாட்டு குடிமக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் இருப்பிட முகவரியை தங்களது பாஸ்போர்ட்டில் அனுமதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தங்களின் இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரியை பெற விரும்புபவர்கள் தாங்கள் தற்பொழுது வைத்திருக்கும் பாஸ்ப்போர்ட்டில் இணைக்க முடியாது எனவும், முகவரியை மாற்ற விரும்புபவர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்த செயல்முறையானது சுமார் ஒரு வருடமாக நடைமுறையில் உள்ளது. இதற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பலர் உள்ளனர். பாஸ்போர்ட்டில் ஐக்கிய அரபு அமீரக முகவரியை விரும்பும் இந்திய குடிமக்களிடமிருந்து தினமும் குறைந்தது 11 முதல் 12 விண்ணப்பங்களை நாங்கள் பெறுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைப் பெறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் சொந்த வசிப்பிடத்தையோ அல்லது வாடகைக்கு தங்கி இருக்கும் முகவரியையோ பாஸ்ப்போர்ட்டில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் சொந்த மற்றும் வாடகை முகவரிகளாக இருக்கலாம் மற்றும் இரண்டு முகவரிகளில் ஒன்றை மட்டுமே சேர்க்க தேர்வு செய்யலாம். “பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் அவர்கள் இரு முகவரிகளையும் வழங்க வேண்டும். பாஸ்போர்ட்டில் எந்த முகவரியை வெளியிட வேண்டும் என்று கேட்கும் ஒரு வழி உள்ளது” என்று அவர் விளக்கியுள்ளார்.

பாஸ்ப்போர்ட்டில் வெளிநாட்டு முகவரியை சேர்ப்பதற்கு வாடகைக்கு தங்கியிருக்கும் இருப்பிடத்தின் ஆவணம், மின்சாரக் கட்டண நகல், தொலைபேசி கட்டண நகல், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்திய துணை தூதரகத்தின் சார்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.