இந்தியா: லாக்டவுன் காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து விமான பயண டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை எவ்வித கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாமல், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 10) தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவானது லாக்டவுன் காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமான பயணங்களுக்கான டிக்கெட் கட்டணங்களை பயணிகளுக்கு திருப்பி தருமாறு சிவில் ஏவியேஷன் பொது இயக்குநகரம் (DGCA) வெளியிட்டிருந்த பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றம் இது குறித்து வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் “இந்தியாவில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனின் போது (மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை) ஒரு பயணி உள்நாட்டு விமானப் பயணத்திற்கோ அல்லது சர்வதேச விமானப் பயணத்திற்கோ டிக்கெட் முன்பதிவு செய்திருந்து அதற்கான கட்டண தொகையை விமான நிறுவனம் பெற்றிருந்தால், விமான பயணம் ரத்து செய்யப்படுவதற்கான கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படாமல் விமான நிறுவனம் முழுத் தொகையையும் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும். மேலும், டிக்கெட்டிற்கான பணத்தை விமான நிறுவனமானது, ரத்து செய்யக் கோரப்பட்ட நாளிலிருந்து மூன்று வார காலத்திற்குள் திருப்பி அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பயண முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், செலுத்திய பணம் மீண்டும் ஏஜென்ட் கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன் தங்களின் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே போன்று ஏப்ரல் 14 முதல் மே 24 வரையிலான லாக்டவுன் காலத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, பணத்தை திரும்பப்பெறுதல் என்பது “கிரெடிட் ஷெல் திட்டம் (credit shell scheme)” மற்றும் அதற்கான சலுகைகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் “கிரெடிட் ஷெல் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை செல்லுபடியாகும் எனவும், இதனை எளிதாக்க சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் குறிப்பிட்ட ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்” என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளது.

பயணிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பித்தர விமான நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், லாக்டவுன் காலத்தின் போது பயணிப்பதற்காக செலுத்தப்பட்ட முன்பதிவு கட்டணங்களை உடனடியாக திருப்பித் தர வேண்டும், ஏனெனில் விமான நிறுவனங்கள் அத்தகைய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.