நவம்பர் 5 முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை.. இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறையில் மாற்றம்..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ளாமல் வரும் பயணிகள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோர விரும்பினால் அவர்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையம் வந்தடைந்தவுடன் கொரோனாவிற்கான பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த சோதனை மேற்கொள்வதற்கான வசதி இல்லை என்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவிற்கான PCR நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதி இல்லாத விமான நிலையங்களுக்கு நெகடிவ் சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகள் ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கும், மீதமுள்ள ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த புதிய திருத்தங்கள் நவம்பர் 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற விண்ணப்பிக்க, பயணிகள் விமானங்களில் பயணிப்பதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆன்லைனில் (www.newdelhiairport.in) எதிர்மறையான பி.சி.ஆர் சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் எதிர்மறை சான்றிதழை தாங்கள் இந்தியாவில் சென்றடையும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுகாதார கவுண்டர்களிலும் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பயணியும் எதிர்மறையான சான்றிதழுடன் அதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு சுய அறிவிப்பு படிவத்தையும் ஆன்லைன் போரட்டலில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் போரட்டலில் சமர்பிக்காதவர்கள் அதன் நகலை சம்பந்தப்பட்ட சுகாதார கவுண்டர்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளில் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற விரும்பும் நபர்கள், தங்களின் உடல் ஆரோக்கியத்தை தாங்களே கண்காணித்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.