ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 க்கு முன் காலாவதியான விசாக்களை வைத்திருந்தும் அமீரகத்தை விட்டு வெளியேறாமல் இருக்கும் நபர்களுக்கு கடந்த மே மாதத்தில் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு அவர்கள் எந்த வித அபராதமும் செலுத்தாமல் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்று அறிவித்திருந்தது. இந்த பொது மன்னிப்பானது இன்று (நவம்பர் 17) வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பொதுமன்னிப்பு முடிவடையக்கூடிய நிலையில், அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற இந்த ஆண்டு இறுதி வரையிலும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
இது குறித்து ICA வின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான இயக்குநர் மேஜர் ஜெனரல் சயீத் ரகன் அல் ரஷிடி அவர்கள் கூறுகையில், அமீரகத்தில் மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களை வைத்திருந்து தற்பொழுது அமீரகத்தில் இருப்பவர்கள், டிசம்பர் இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற முடிந்தால் அவர்களின் அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும், அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் அவர்கள் மீதான எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் பணி அனுமதிகள் சம்பந்தப்பட்ட அனைத்து அபராதங்களும் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கால நீட்டிப்பானது காலாவதியான விசாக்களை வைத்திருந்து சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் தங்களின் விசா நிலையை சட்டபூர்வமாக மாற்றிக்கொள்ள மற்றொரு வாய்ப்பை வழங்குவதற்கான உத்தரவுக்கிணங்க பொது மன்னிப்பின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பொது மன்னிப்பானது மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.