சட்டவிரோத குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரிப்பு..!! விசா விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குவைத் அரசு திட்டம்..!!

குவைத்தில் காலாவதியான விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்காக வழங்கப்பட்ட சலுகை காலம் இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருப்பதால், காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் சலுகை காலம் முடிவதற்குள் தங்களது விசாவினை புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஜனவரி 31க்குள் முடிவடைய விருக்கும் இந்த சலுகை காலமானது மீண்டும் நீட்டிக்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை காலம் முடிந்ததும் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சாரத்தை தொடங்க குவைத் அரசு தயாராகி வருவதால், பல்வேறு பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சலுகை காலம் முடிந்த பிறகு காலாவதியான ரெசிடென்ஸ் பெர்மிட் வைத்திருந்து குவைத்தில் தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்சமயம் குவைத்தில் விசா விதிமீறல் புரிந்த 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உள்ளனர் என்றும், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் சலுகை காலம் தொடங்கியதிலிருந்து 5,000 பேர் மட்டுமே சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி தங்களது விசா நிலையை திருத்தி அமைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் விசா விதிமீறல் புரிந்த வெளிநாட்டவர்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. குவைத் நாட்டின் செய்தி நிறுவனம் அல் ராய் கூறுகையில் நாட்டில் சுமார் 180,000 வெளிநாட்டவர்கள் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் பெர்மிட் இல்லாமல் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த எண்ணிக்கையானது 38 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் விசா விதிமீறல் புரிந்தோரின் எண்ணிக்கை 130,000 என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த வருட மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை முன்னிட்டு முதன் முதலாக காலாவதியான விசாக்களுக்கான சலுகைக் காலத்தை அறிவித்தது. அந்த சலுகை காலம் மே மாதத்தில் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசாங்க நிறுவனங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்ததால், அமைச்சகம் அறிவித்திருந்த சலுகை காலம் நீட்டிக்கப்பட்டது. ஆகவே வெளிநாட்டவர்கள் தங்களின் ரெசிடென்ஸ் பெர்மிட் மற்றும் விசிட் விசாக்களை ஆகஸ்ட் இறுதி வரை என அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதிக்கப்படுவதாக அறிவித்தது.

அதன் பின்னர் மூன்றாவது சலுகை காலம் அறிவிக்கப்பட்டது, இது நவம்பர் 30 ம் தேதி முடிவடைய இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் காலக்கெடு முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 31 வரை சலுகை காலம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக புதிதாக நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சர், தமர் அல் அலி அல் சபா அவர்கள், டிசம்பர் இறுதியில் முடியவிருந்த சலுகை காலத்தை ஜனவரி 31 வரை நீட்டிப்பதாக அறிவித்து, அனைத்து குடியிருப்பாளர்களும் ஜனவரி 31-ம் தேதிக்கு முன்னர் தங்கள் விசா நிலையை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.