வளைகுடா நாடுகள் என கூறப்படும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் ஆகிய ஆறு நாடுகளும் தங்களுக்குள் நட்புறவு கொண்டு வர்த்தகம் செய்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு சில காரணங்களால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கத்தார் நாட்டுடன் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகளும் தனது நல்லுறவை முறித்து கொண்டன.
அத்துடன் இந்த நாடுகள், கடந்த ஜூன் மாதம் 2017 ம் ஆண்டு முதல் கத்தார் நாட்டிற்கு பயணத் தடையை விதித்தன. மேலும், அந்நாட்டு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டு கத்தாரை (boycott) புறக்கணித்தன. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சவூதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் இடையில் வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லைகளை திறக்க ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவின் அல் உலா பகுதியில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) தலைவர்களின் உச்சி மாநாட்டில் (GCC summit) முழு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இதில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அதில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை அண்டை நாடான கத்தார் உடனான உறவை முழுமையாக மீட்டெடுக்க ஒப்புக் கொண்டுள்ளன. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கத்தாருக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லை பகிரப்பட்டு மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில், கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட கத்தாருடன் ஒரு வாரத்திற்குள் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படலாம் என்று ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கர்காஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) தலைவர்களின் உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் மீண்டும் நட்புறவு கொண்ட நாடுகளாக மாறும் என்றும் கத்தார் மற்றும் அமீரகம் இடையே பொருளாதார, வணிக நடவடிக்கைகள் மூன்று வருடங்களுக்கு முன் இருந்தது போல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.