இனி அமீரகத்திலேயே சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்..!! செயல்முறை என்னென்ன??

காலாவதியான சர்வதேச இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்திய தூதரகமானது, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) ஒத்துழைப்புடன், இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட சர்வதேச இந்திய ஓட்டுநர் உரிமத்தை ( International Driving Permit) மீண்டும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

செயல்முறை:

  • இந்த தூதரக சேவையைப் பெற விரும்பும் நபர்கள், அனைத்து வேலை நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை) அலுவலக நேரங்களில் (காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை) தூதரகத்திற்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும்பொழுது தங்களின் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், காலாவதியான IDP எண் மற்றும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • ஆவணங்களின் சரிபார்ப்பிற்குப் பிறகு, இதர தூதரக வடிவத்தில் (EAP-II) நிரப்பப்பட்டதை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள் – https://indianembassyuae.gov.in/application-form.php என்ற லிங்கில் சென்று அதிலுள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்குமாறு கேட்கப்படும் என்றும் அத்துடன் தூதரக சேவை கட்டணம் 40 திர்ஹம்ஸும் இந்திய சமூக நல நிதி (ICWF) கட்டணமாக 8 திர்ஹம்ஸும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் www.parivahan.gov.in என்ற போர்ட்டலில் தூதரகம் வழங்கிய ரசீது மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து அத்துடன் அந்த ஆன்லைன் போர்ட்டலில் IDP கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஆன்லைனில் விண்ணப்பித்ததற்கு பின், உரிமங்களை வழங்கும் அதிகாரம் (MoRTH), ஆவணங்களை சரிபார்த்து, IDP யை நேரடியாக விண்ணப்பதாரரின் குடியிருப்பு முகவரிக்கு அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

தூதரகம் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த தூதரக சேவையின் மூலம் இடம்பெயர்ந்தோரின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தின் புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்கும் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளது. விண்ணப்பித்ததற்கு பின், விண்ணப்பத்தின் நிலை உட்பட இது தொடர்பான எந்தவொரு விசாரணையையும் இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரத்திடமிருந்து (MoRTH) நேரடியாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.