இந்தியா: நாளை முடியவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடையை மீண்டும் நீட்டித்த DGCA..!! ஒரு வருடத்தை தாண்டும் விமான பயண தடை..!!

இந்தியாவிற்கும் பிற உலகநாடுகளுக்கும் இடையே விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடை அடுத்த மாதம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation –  DGCA) நேற்று வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து DGCA வெளியிட்டிருக்கும் அந்த சுற்றறிக்கையில் சர்வதேச விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த முந்தைய தடை நாளை பிப்ரவரி 28 அன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.

அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ஜூன் 26, 2020 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில் இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச விமான பயணிகள் சேவைகள் தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் செல்லுபடியை 2021 மார்ச் 31 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை தகுதிவாய்ந்த அதிகாரம் நீட்டித்துள்ளது” என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை 16,577 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதால் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஏர் பபுள் (Air Bubble) ஒப்பந்தங்களின் கீழ் சரக்கு விமானங்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அந்த சுற்றறிக்கையில் DGCA குறிப்பிட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பங்களாதேஷ், பூட்டான், கனடா, எத்தியோப்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, குவைத், மாலத்தீவுகள், நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், கத்தார், ருவாண்டா, சீஷெல்ஸ், தான்சானியா, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கிய சுமார் 27 நாடுகளுடன் இந்தியா இருதரப்பு ஏர் பபுள் ஒப்பந்தம் கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக் டவுனை தொடர்ந்து கடந்த வருடம், 2020 மார்ச் 23 ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.