கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி..!! ஓமானில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள், தடைகளை அறிவித்த உச்ச குழு..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மீண்டும் பரவுவதை தடுப்பதற்காக ஓமான் அரசு நேற்று பிப்ரவரி 10, 2021 புதன்கிழமை முதல் தனது நில எல்லையை மூடுவதாகவும் மற்றும் கொரோனா வைரஸிற்கு எதிரான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது.

ஓமான் மற்றும் உலகெங்கிலும் உள்ள தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் சையித் ஹமூத் பின் பைசல் அல் புசைடி தலைமையில் நடைபெற்ற உச்சக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக ஓமான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் மற்றும் புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் உலக நாடுகளில் வெளிப்பட்டு வருவதை தொடர்ந்து, உச்சக் குழு விரைவான பரவலின் தாக்கத்தையும், அதிகரித்து வரும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மேலும் அரசு அறிவித்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதது, சமூகக் கூட்டங்களில் கலந்துகொள்வது, தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது மற்றும் முகக்கவசங்களை அணியத் தவறியது உள்ளிட்ட காரணங்கள் குறித்த தொற்றுநோயியல் விசாரணையின் முடிவுகளை குழு ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பரவும் கொரோனா வைரஸிற்கு எதிராக உச்சகுழு அறிவித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு…

– அனுமதியளிக்கப்பட்டுள்ள டிரக்குகளை தவிர்த்து மறு அறிவிப்பு வரும் வரை நில எல்லைகள் மூடப்படும்.

– மற்ற நாடுகளில் இருக்கும் ஓமான் நட்டு குடிமக்கள் முடிவை வெளியிட்ட நேரத்திலிருந்து தொடங்கி பிப்ரவரி 21 (ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணி வரையிலும் நிலத் துறைமுகங்கள் வழியாக 10 நாட்களுக்கு நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் துறைமுகங்கள் மீண்டும் திறக்கப்படும் வரை தனிநபர்கள் எவரும் நிலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

– நிலத் துறைமுகங்கள் வழியாக சுல்தானுக்குள் நுழையும் அனைத்து ஓமான் நாட்டு குடிமக்களும் தங்கள் சொந்த செலவில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கும், சுல்தானுக்கு வருகை தரும் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பிற நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

– இதற்கு முன்னர் பலர் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்காததால் இம்முறை நிலம், கடல் மற்றும் விமான நிலையங்கள் வழியாக வருகை தரும் அனைவருக்கும் அவர்களின் சொந்த செலவில் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலுக்கும் உச்சக் குழு முடிவு செய்துள்ளது.

– எரிபொருள் நிலையங்கள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் தனியார் மருந்தகங்களைத் தவிர்த்து 14 நாட்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) தொடங்கி இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையிலும் வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட்டில் உள்ள அனைத்து வணிக நடவடிக்கைகளையும் மூடுவது.

– பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு ஓமானின் அனைத்து கவர்னரேட்டிலும் கடற்கரைகள் மற்றும் பொது பூங்காக்களை மூடுவது.

– ஓய்வு இல்லங்கள், பண்ணைகள், குளிர்கால முகாம்கள் மற்றும் பிற இடங்களில் அனைத்து வகையான கூட்டங்களுக்கும் தடை.

– வீடுகள் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் குடும்பக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு.

– பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள சேவை அரங்குகள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள், ரெஸ்டாரன்ட்கள், கஃபேக்கள் மற்றும் உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பிப்ரவரி 12 முதல் தொடங்கி மேலும் அறிவிப்பு வரும் வரை அதன் திறனில் 50 சதவீதம் குறைத்தல்.

– தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தை குறைப்பதற்கும், தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதான நிதிச் சுமையைத் தணிப்பதற்கும், இந்த நிறுவனங்களுக்கான ராஃப்ட் நிதிக்கு செலுத்தும் உரிய தவணைகள் செலுத்துவதை ஜனவரி 1 முதல் ஜூன், 2021 இறுதி வரை தாமதப்படுத்த குழு முடிவு செய்தது.

– பெரும்பாலான நாடுகள் பயணத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், வரவிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசிய தேவை இல்லை என்றால் நாட்டிற்கு வெளியே பயணத்தைத் தவிர்க்குமாறு உச்சக் குழு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியது.

– உத்தியோகபூர்வ பணிகள் மற்றும் பிற நிகழ்வுகளில் பங்கேற்க நாட்டிற்கு வெளியே செல்லும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பயணத்தை குறைக்கவும் குழு பரிந்துரைத்தது.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து கொரோனா விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள் என்றும் அத்துடன் அவர்களின் தகவல்களை பகிரங்கமாக பெயரிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறும் எந்தவொரு நிறுவனத்தையும் மூடிவிடுவதாக உச்சக் குழு எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.