சவூதி: கொரோனாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிப்பு..!! உள்துறை அமைச்சகம் தகவல்..!!

சவூதி அரேபியாவில் கொரோனா மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சவூதி அரசானது மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவித்திருந்தது. சமூக கூட்டங்கள், நிகழ்வுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கைகளானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொடங்கி மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கவிருப்பதாக தற்பொழுது சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகள் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் கடந்த பிப்ரவரி 4 ம் தேதி விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என தற்பொழுது தெரிய வந்துள்ளது.

தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள்

1. சமூக நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. அனைத்து பொது பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வுகள் நடைபெற தடை

3. சினிமாக்கள், உணவகங்கள், மால்கள் அல்லது பிற பொது இடங்களில், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்களில் உள்ள உட்புற பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் விளையாட்டு பகுதிகள் மூடப்படும்.

4. உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் உணவு சேவை இடைநிறுத்தப்பட்டு, கூட்டமாக நபர்கள் ஒன்று கூட அனுமதிக்காமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுகளை வாங்கிக்கொண்டு எடுத்துச்செல்லும் சேவைக்கு (takeaway service) மட்டும் அனுமதி வழங்கப்படும்

அரசு அறிவித்திருக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 20 நாடுகளில் இருந்து விமானங்களுக்கு தற்காலிக தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.