ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலிருந்து அபுதாபிக்கு வரும் வாகன ஓட்டிகள் அபுதாபியின் எல்லையில் அமைந்துள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை அணுகும்போது தங்களின் வாகனத்தில் இயங்கும் வானொலி நிலையங்களின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் வழிமுறைகள் மற்றும் கோவிட் 19 முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிவிப்பு செய்திடும் விதமாக “அவசர வானொலி ஒலிபரப்பு” எனும் புதிய முயற்சியை அபுதாபி காவல்துறை செயல்படுத்தியுள்ளது.
வானொலி நிலையங்கள் மூலம் அறிவிப்பு செய்யப்படவிருக்கும் இந்த புதிய முயற்சியானது அமீரகத்தின் 24 வானொலி நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வானொலி சேவையானது, சோதனைச் சாவடிகளில் இருந்து 200 மீட்டருக்குள் வரும் வாகன ஓட்டிகளுக்கு தானாகவே சோதனைச் சாவடி நடைமுறைகள் பற்றிய தகவல் மற்றும் செய்திகளை அரபு, ஆங்கிலம், உருது மற்றும் மலையாள மொழிகளில் வழங்கும் என்றும் அபுதாபி காவல்துறையினரால் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் வழிமுறைகள்…
வாகன ஓட்டிகளுக்கு வேகத்தைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டு, நியமிக்கப்பட்ட வழிகளைப் பின்பற்றவும். வலதுபுற பாதை லாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும், ஒரே வாகனத்தில் ஒரே வீட்டு உறுப்பினர்களாக இல்லாவிட்டால் அதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மூன்றுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதையும் மேலும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் புகைப்படம் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் வானொலியை டியூன் செய்து கேட்பவர்களுக்கு அவசர வானொலி ஒலிபரப்பின் மூலம் நினைவூட்டப்படும்.
கோவிட் 19 முன்னெச்சரிக்கைகள்…
வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் எப்போது தங்கள் முகக்கவசங்களை முறையாகப் போடவேண்டும் என்பது பற்றியும், அதேபோன்று தங்களின் எமிரேட்ஸ் ஐடிகளை எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு காண்பிக்கவும் இந்த ஒளிபரப்பில் அறிவுறுத்தப்படுவார்கள். கூடுதலாக, அல் ஹோஸன் பயன்பாட்டில் அவர்களின் COVID-19 சோதனை முடிவுகளையும், அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி விமான நிலையத்தின் வழியாகச் சென்றால் அதுகுறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்படும்.
போலீஸ் வானொலி சேவைகள்…
வாகன ஓட்டிகள் டியூன் செய்திருக்கும்போது அவசர வானொலி ஒலிபரப்பானது பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை நெருங்கி வரும் வாகனம் குறித்தும் சோதனை சாவடி அதிகாரிகளுக்கு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி காவல்துறையினர் சாலை நிலைமைகளை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிப்பதற்கும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு அறிவிப்பதற்கும் வானொலி ஒலிபரப்பை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். சோதனைச் சாவடிகளை அணுகும்போது அனைத்து COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ரோந்துகள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் நெறிமுறைகளை கடைபிடிப்பது போக்குவரத்தை சீராக்கவும், வாகன நெரிசலைத் தடுக்கவும் உதவும் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.