இந்தியாவில் பரவும் மூன்றாவது மாறுதலுக்கு உட்பட்ட அதி தீவிர கொரோனா வைரஸ்.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதுகாப்பில்லை.. 11 நாடுகள் இந்தியாவிற்கு தடை..!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இந்த சூழலில் இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளைகள் இல்லாத நிலையில், சில நாடுகள் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க இந்தியாவிற்கு பயணத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன.

தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மூன்றாவது முறை உருமாற்றம் அடைந்த (triple mutant variant of Covid) அதி தீவிர வகையை சார்ந்ததாகவும், மேற்கு வங்காளம் மாநிலத்தில் முதலில் கண்டறியப்பட்ட E484K என்று குறியிடப்பட்டுள்ள இந்த வைரஸானது பிற பகுதிகளான புது டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது முறை மாறுதலுக்கு உட்பட்ட கொரோனா வைரஸ் குறித்து மெக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) தொற்றுநோயியல் பேராசிரியர் டாக்டர் மதுகர் பாய் ஒரு தொலைக்காட்சி சேனலின் பேட்டியில் கூறும்போது “இது மிகவும் பரவும் மாறுபாடு கொண்ட வைரஸ், இது நிறைய பேரை மிக விரைவாக நோய்வாய்ப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் “நீங்கள் முன்னர் வேறொரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அல்லது தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட, இந்த மாறுபாடு கொண்ட வைரஸ் தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புகள் குறைவு” என்று தேசிய பயோமெடிக்கல் ஜெனோமிக் இன்ஸ்டிடியூட் (National Institute of Biomedical Genomic – NIBG) அதிகாரி ஸ்ரீதர் சின்னசாமி இந்தியாவை சேர்ந்த ஒரு செய்தி நாளிதலுடன் நடந்த உரையாடலில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த புதன்கிழமை மட்டும் 3 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே போன்று அந்நாளில் மட்டும் இந்த வைரஸ் பாதிப்பால் 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்ததாகவும் இந்திய அரசு வட்டாரங்கள் அறிவித்திருந்தது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகின் மிகப்பெரிய தினசரி மொத்த எண்ணிக்கையில் ஒன்றாகும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகள் இந்தியாவில் இருந்து உள்வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்புகளை பொறுத்தே மீண்டும் விமான போக்குவரத்துக்கு மற்றும் தரை வழி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் உலக நாடுகள் கூறியுள்ளது.

அதேபோன்று அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்த சில உலக நாடுகளின் தலைவர்களும் தங்களின் பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தொடர்ந்து இதற்கு முன்னர் தனது பயணத்தை ரத்து செய்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்களன்று மீண்டும் இரண்டாவது முறையாக தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார், அதே நேரத்தில் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தனது பயணத்தை ஏப்ரல் மாத இறுதியில் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது மாறுதலுக்கு உட்பட்ட இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருவதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், ஹாங்காங், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 11 நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்தித்துள்ளது. மேலும் இந்த சூழலில் இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும் அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.