அபுதாபி: இரு வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 இந்தியர்கள் உட்பட 5 பேர் பலி..!!

அபுதாபியில் உள்ள அல் தஃப்ராவில் நடந்த வாகன விபத்தில் ஒரு எமிராட்டி, ஒரு அரபு பெண் மற்றும் மூன்று இந்தியர்கள் இறந்துள்ளதாக அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பிரதான சாலையில் வந்து கொண்டிருந்த வாகனத்தை ஒழுங்காக கவனியாமல் ஒரு வாகனம் பிரதான சாலையில் நுழைந்ததால் இந்த இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. வாகனங்கள் மோதியதால் டிரைவர்கள் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் தீப்பிடித்துள்ளன.

விபத்து குறித்த தகவல் அறிந்த அபுதாபி காவல்துறையினர் உடனடியாக பதிலளித்து, ஆம்புலன்ஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு போலீஸ் ரோந்துகளை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், மூன்று இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து இந்திய தூதரகம் தெரிவிக்கையில், “தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று இந்தியர்கள் பணிபுரிந்த நிறுவனத்துடனும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது”.

மேலும், விபத்து குறித்து அபுதாபி காவல்துறை விசாரித்து வருவதாகவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக திருப்பி அனுப்புவதற்கும், இழப்பீடு தொடர்பான பிற சம்பிரதாயங்களை நிறைவு செய்வதற்கும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தூதரகத்தால் வழங்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வாகனம் ஓட்டும் போது, ​​குறிப்பாக குறுக்கு பாதைகளிலும் (cross roads) பிரதான சாலைகளில் நுழையும் போதும் ஓட்டுநர்கள் கவனத்துடன் இருக்கவும், குறிப்பிடப்பட்டிருக்கும் வேக வரம்பில் ஓட்டிக்கொள்ளவும் அபுதாபி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை காவல்துறை எச்சரித்துள்ளது.