இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்த பஹ்ரைன்..!!

பஹ்ரைன் நாடானது தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய சுகாதார நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

COVID-19 ஐ சமாளிக்கும் பஹ்ரைனின் தேசிய மருத்துவக் குழு, இந்த மூன்று நாடுகளிலிருந்து நேரடியாக மற்றும் டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக வரும் பயணிகளுக்கான நடைமுறைகளை புதுப்பித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 27, செவ்வாய்க்கிழமை முதல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து பஹ்ரைனுக்கு வரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட QR குறியீட்டைக் கொண்டிருக்கும் PCR பரிசோதனையின் எதிர்மறை முடிவுகளைக் கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் சுமார் 450,000 முதல் 500,000 இந்தியர்கள் வசிப்பதாக கூறப்படுகின்றது.

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து பயணிகளுக்கும் முன்னர் அறிவிக்கப்பட்ட நடைமுறைகளுடன் சேர்த்து தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என்று குழு மேலும் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் பிப்ரவரி 22 முதல், பஹ்ரைன் நாட்டிற்கு வரும் அனைத்து குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த செலவில்  செலவில் (BD 36) தொடர்ச்சியான PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல் சோதனை பஹ்ரைன் வந்திறங்கியவுடனும் இரண்டாவது சோதனை ஐந்து நாட்களுக்குப் பிறகும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மற்றும் இறுதி சோதனை பஹ்ரைனுக்கு வந்த 10 வது நாளில் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.