அமீரக செய்திகள்

அமீரகத்திற்கு வரும் பயணிகள் தெரியாத நபர்களிடம் இருந்து பொருட்களை பெற வேண்டாம்..!! சுங்க ஆணையம் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் நபர்கள், பைகளில் இருக்கும் பொருட்களை பற்றி நன்கு தெரியாமல், தெரியாத நபர்களிடமிருந்து சாமான்களைப் பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இது சில சமயங்களில் அவர்களை சிக்கலில் ஆழ்த்தக்கூடும் என்பதால் கவனத்துடன் இருக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் பெடரல் சுங்க ஆணையம் (Federal Customs Authority, FCA) பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

FCA சமீபத்தில் வெளியிட்ட ஒரு விரிவான ஆலோசனை மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆபத்து இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்கான உதவிக்குறிப்புகளில் இது குறித்த அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் நபர்கள் புறப்படும் நாட்டில் தெரியாத நபர்களிடமிருந்து சாமான்கள் அல்லது பைகள் பெறுவதைத் தவிர்க்க வேண்டும், நண்பர்களின் சாமான்களை பெறும் பொழுது அவற்றுள் என்ன இருக்கின்றது என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளையும் போலவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணிக்கும் போதும் பயணிகள் எடுத்துச் செல்ல கூடாத பல பொருட்களையும் சுங்க அதிகாரிகள் தடை செய்துள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பொருட்களில் போதைப்பொருள், சூதாட்ட கருவிகள் மற்றும் இயந்திரங்கள், நைலான் மீன்பிடி வலைகள், உயிருள்ள பன்றி இன விலங்குகள், மூல தந்தங்கள், சிவப்பு விளக்கு தொகுப்பு கொண்ட லேசர் பேனாக்கள், போலி மற்றும் கள்ள நாணயம், அசுத்தமான கதிர்கள் மற்றும் தூசி, வெளியீடுகள் (publications), படங்கள், மதரீதியாக தாக்குதல் அல்லது ஒழுக்கக்கேடான வரைபடங்கள் மற்றும் கல் சிற்பங்கள், அத்துடன் வெற்றிலை உள்ளிட்ட பான் பொருட்கள் போன்றவற்றை ஆணையம் வகைப்படுத்தியுள்ளது.

பல தடைசெய்யப்பட்ட பொருட்களில் குறிப்பிட்ட சில பொருட்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலைத் தொடர்ந்து நாட்டிற்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது நேரடி விலங்குகள், தாவரங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள், ஊடக வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள், புதிய வாகன டயர்கள், டிரான்ஸ்மிஷன் மற்றும் வயர்லெஸ் சாதனங்கள், மது பானங்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், மூல வைரங்கள் மற்றும் புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட சிகரெட்டுகள் போன்றவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனுமதிக்கப்படாத பொருட்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் கடத்தி செல்ல முற்பட்டு சிக்கிய பயணிகளுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்பதை FCA வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!