அமீரகத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!! மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் கணிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக மழைப்பொழிவைக் கண்டுள்ளது.

கோடைகாலம் ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பெய்ய ஆரம்பித்திருக்கும் மழையானது பொதுமக்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று துபாயின் ஹத்தா, ராஸ் அல் கைமாவின் வாடி அல் குர் மற்றும் மசாபி-அஸ்மா சாலை ஆகிய இடங்களில் மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், கொர்ஃபக்கான் மற்றும் ஃபுஜைரா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

மேலும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்கள் விலகி இருக்குமாறு NCM ஒரு எச்சரிக்கை செய்தியும் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக நாள் முழுவதும் மேகமூட்டமான வானிலை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெப்பநிலை குறைந்து, தெரிவுநிலையைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், நாளையும் அமீரகத்தன் சில கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகலில் அதிக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் அபுதாபி மற்றும் அமீரகத்தின் வேறு சில பகுதிகளில் மழை பெய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததினால், சில மலைப்பகுதிகளில் அழகான நீர்வீழ்ச்சிகள் உருவாகின. புஜைராவில் உள்ள தவ்யீன், மசாபி மற்றும் வாடி அல் ஃபை ஆகிய மலைகளில் நீர்வீழ்ச்சிகள் ஓடும் வீடியோக்களை NCM வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.