கொரோனாவிற்கான போராட்டம்: அமீரகத்திடம் இருந்து 12 ஆக்ஸிஜன் டேங்கர்களைப் பெற்ற இந்தியா..!!

கொரோனா பாதிப்பு அதிகம் பரவி வரும் இந்தியாவிற்கு உதவி புரிய பல்வேறு நாடுகளும் முன் வந்துள்ள நிலையில், ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்ல பயன்படும் 12 காலியான கிரையோஜெனிக் கண்டெய்னர்களை ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக ஆறு டேங்கர்கள் அடுத்த வாரம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கான போராட்டத்தில் இந்தியா கடுமையான மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் உலகம் முழுவதும் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய் தலைமையிடமான காலே எனர்ஜியிலிருந்து ஆக்ஸிஜன் டேங்கர்களை குழு பெற்றுள்ளது.

இந்த குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சவூதி அரேபியா, பாங்காக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து திரவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் கிரையோஜெனிக் டேங்கர்களை பல பங்குதாரர்களின் உதவியுடன் வாங்கியுள்ளோம். இந்தியாவில் நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை அதிக அளவில் வழங்குவதாகும். எனவே, துபாயில் இருந்து வாங்கப்பட்ட காலியான ஆக்ஸிஜன் டேங்கர்களின் மூலம் ஆக்ஸிஜன் பல்வேறு பகுதிகளுக்கு வழங்குவதை மேம்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-17 போக்குவரத்து விமானம் இதுபோன்ற 12 கண்டெய்னர்களை துபாயில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றிச் சென்றுள்ளது.

அவர் மேலும் கூறுகையில், “இந்த முயற்சியில், துபாய் அரசு, இந்திய அரசு, இந்திய விமானப்படை (IAF), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயை தளமாகக் கொண்ட காலே எனர்ஜி ஆகியவற்றுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இதுபோன்ற 12 கண்டெய்னர்கள் IAF விமானம் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் ஆறு கண்டெய்னர்கள் அடுத்த வாரம் துபாயிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவாலான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்பதற்கு துபாய் அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் காட்டிய ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறி மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஐந்து இந்திய மாநிலங்களில் 14 மருத்துவமனைகளை இயக்கும் துபாயை தளமாகக் கொண்ட அஸ்தெர் TM ஹெல்த்கேரின் மருத்துவ நிபுணர், இந்த கண்டெய்னர்கள் இந்தியாவில் ஆக்ஸிஜன் விநியோகத் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், முக்கியமாக போதிய ஆக்ஸிஜன் இன்றி போராடும் உயிர்களைக் காப்பாற்றவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா ஆக்ஸிஜன் விநியோகத்தின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, மேலும் உயிர்காக்கும் வாயுவைக் கொண்டு செல்ல கண்டெய்னர்கள் இல்லாததால் இந்த நெருக்கடியானது மிக மோசமடைகிறது. இந்த நிலையில், தற்பொழுது வழங்கப்படிருக்கும் ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள், சிக்கலான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவும் மற்றும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அஸ்தெர் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷெர்பாஸ் பிச்சு கூறியுள்ளார்.