இந்திய விமானப்படையானது (IAF) ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஆறு காலியான கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை கொண்டு செல்ல விமானத்தை திங்கள்கிழமை அனுப்பியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்துள்ளார்.
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் தேவையான மருத்துவ ஆக்ஸிஜனின் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை முதல், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நிரப்பு நிலையங்களுக்கு திரவ ஆக்ஸிஜனை சேமிப்பதற்கான வெற்று ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் கண்டெய்னர்களை IAF அதற்கு சொந்தமான விமானம் மூலம் அனுப்பி வருகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், “இன்று காலை ஒரு IAF விமானம் அமீரகத்திற்கு வந்து, ஆறு காலியான கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை இந்தியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளது. இது இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அதை இங்குள்ள தனியாரிடம் இருந்து நேரடியாகப் பெறுகிறோம்” என்று கூறியுள்ளார்.
“நாங்கள் கடந்த மூன்று நான்கு நாட்களாக இதற்காக முயற்சித்து வருகிறோம். நாளை இதேபோன்ற எண்ணிக்கையில் கண்டெய்னர்களை பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று விளக்கியுள்ளார்.
துபாயில் உள்ள தனியார் துறையிலிருந்து நேரடியாக கன்டெய்னர்களை இந்திய அரசு வாடகைக்கு எடுத்துள்ளது என்றும் கபூர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அரசின் ஆதரவு
இந்தியாவை ஆதரிக்க ஐக்கிய அரபு அமீரக அரசாங்கமும் தயாராகி வருவதாக தூதர் தெரிவித்தார். “அவர்கள் தங்கள் சொந்த வழியில் இந்தியாவிற்கு உதவ முயற்சித்து வருகின்றனர். அத்துடன் இந்தியாவில் தற்பொழுது தேவைப்படும் விஷயங்கள் என்ன என்பதை நாங்கள் அவர்களிடம் கூறியுள்ளோம். மேலும் அவர்கள் அதற்கு உதவியளிக்க முயன்று வருகிறார்கள்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமண்யம் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.
ஷேக் அப்துல்லா இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முழு ஆதரவையும் ஒற்றுமையையும் மீண்டும் வலியுறுத்தியதோடு, தற்போது இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவாக அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள், அரசு மற்றும் மக்கள் அனைவரும் இந்தியாவுடன் துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.