இந்தியாவிற்கு பயணத் தடையை அறிவித்த குவைத்..!! மறு அறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கும் என தகவல்..!!

குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களையும் ஏப்ரல் 24 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளது. குவைத்தை சேர்த்து இதுவரை மொத்தம் 12 நாடுகள் இந்தியாவிற்கு பயணத்தடையை விதித்துள்ளன.

உலகளாவிய கொரோனா வைரஸ் நிலையை மதிப்பீடு செய்த பின்னர் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடு வழியாகவோ வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் இல்லையெனில் வேறு நாடு வழியாக குவைத் வரும் பயணிகள் அந்த நாட்டில் குறைந்தது 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் குடிமக்கள், அவர்களின் முதல் தர உறவினர்கள் (கணவன், மனைவி, குழந்தைகள்) மற்றும் அவர்களின் வீட்டுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சரக்கு விமானப் போக்குவரத்து சேவை வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.