வெளிநாட்டிலிருந்து தமிழகம் செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம்.. ஏப்ரல் 26 முதல் அமல்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தமிழகம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த வாரத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்திருந்த பகுதி நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல அனுமதியில்லை என்றும் அதேபோன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அதாவது சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது உள்ள சூழலை கருத்தில்கொண்டும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் திடீரென உயர்ந்து வருவதை கவனத்தில் கொண்டும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வர இருப்பதாக இன்று தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய சுற்றறிக்கையில் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கும், அதேபோன்று வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கும் புதிய நடைமுறையை விதித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காததாலும் நோய்த்தொற்று நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் கீழ், 26.04.2021 அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” என்று கூறியுள்ளது.

தமிழக அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளில் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு அவசியம் என தெரிவித்துள்ளது. புதிய உத்தரவின் படி, “வெளிநாடுகளிலிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரும் பயணிகள், அதே போன்று புதுச்சேரி தவிர்த்து பிற வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வரும் பயணிகள் http://eregister.tnega.org என்ற ஆன்லைன் போரட்டலில் தங்களின் வருகை குறித்து பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

மேலும் பயணிகள் தங்களின் விபரங்களை மேற்கூறிய ஆன்லைன் போரட்டலில் பதிவு செய்த விவரத்தினை தமிழநாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த சுற்றறிக்கையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.