ADVERTISEMENT

இந்தியா-அமீரகம் பயணத்தடை விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தும் விமானப் போக்குவரத்து ஆணையம்..!!

Published: 24 Apr 2021, 4:15 AM |
Updated: 24 Apr 2021, 5:02 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் மற்றும் தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கான தடை குறித்து முன்னர் அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் குறித்த தெளிவான விளக்கத்துடன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும் அனைத்து தேசிய மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கும், அதே போல் டிரான்ஸிட் பயணிகளை ஏற்றி வரும் விமானங்களுக்கும் அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் டிரான்ஸிட் விமானங்களுக்கு இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு முன்பு கடந்த 14 நாட்களில் இந்தியாவில் இருந்த பயணிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னர் அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் சில பிரிவினருக்கு இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விலக்கு பெற்றவர்களில் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், உத்தியோகபூர்வ பிரதிநிதிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் ஆகியோர் அடங்குவர்.

அவர்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் விமான நிலையத்திற்கு வந்த பின் மேற்கொள்ளப்படும் PCR சோதனைகள் மற்றும் நாட்டிற்குள் நுழைந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் எடுக்கப்படும் PCR சோதனைகள் ஆகியவை அடங்கும்.

மேலும், அசல் சோதனை அறிக்கைகளுக்கான QR குறியீட்டை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனைகளின் எதிர்மறை அறிக்கைகளை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஏப்ரல் 24 சனிக்கிழமையன்று 23:59 முதல் தொடங்கி, இந்தியாவில் இருந்து பிற நாடுகளின் வழியாக அமீரகம் வருபவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன் குறைந்தது 14 நாட்கள் அந்த நாடுகளில் தங்க வேண்டியது அவசியம் என்பதையும் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விதிமுறைகள் 10 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் 10 நாட்களுக்குப் பிறகு இந்த முடிவானது நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சரக்கு விமான சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுவதற்கும், தாமதமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைத் தெரிந்து, அவற்றை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.