157 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பி உதவிய அமீரகம்..!!

கொரோனாவின் இரண்டாம் அலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகள் செய்து வருவதைப் போன்றே ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை அளித்திருந்த நிலையில், தற்பொழுது இந்தியாவுக்கு 157 வென்டிலேட்டர்கள், 480 BiPAP உபகரணங்கள் மற்றும் பிற மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது.

மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியாவிற்கு,  வென்டிலேட்டர்கள் மற்றும் பைல்வெல் பாசிட்டிவ் ஏர்வே பிரஷர் (bilevel positive airway pressure, BiPAP) சாதனங்கள் போன்றவற்றை வழங்குவது தகுந்த நேரத்தில் வழங்கப்படும் உதவியாகும்.

மேலும், இந்த உதவிக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி நன்றி தெரிவித்துள்ளார்.

அதே போல் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அமீரகத்தின் இந்த உதவியைப் பாராட்டியதுடன், “கோவிட் -19 க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் வலுவான ஒத்துழைப்பைத் தொடர்கின்றன. ஐக்கிய அரபு அமீரக அரசிடமிருந்து சரியான நேரத்தில் மற்றும் மதிப்புமிக்க மருத்துவப் பொருட்களைப் பெறுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவாக அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளது என வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்திருந்தார்.

இந்தியா இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து 18 காலியான கிரையோஜெனிக் கண்டெய்னர்களை பெற்றதுடன், அடுத்த வாரம் மேலும் கூடுதல் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறது. துபாயை தலைமையிடமாகக் கொண்ட காலே எனர்ஜியிலிருந்து வெற்று ஆக்ஸிஜன் டேங்கர்களை இந்திய நிறுவனமான அதானி குழுமம் பெற்றுள்ளது.