துபாயில் வாங்கும் பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கக்கூடிய அதிரடி விற்பனையானது இம்மாத இறுதியில் துவங்கப்படவுள்ளது.
3 Day Super Sale என்பதன் படி, இந்த தள்ளுபடி விற்பனையானது 3 நாள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விற்பனை மே 27 வியாழக்கிழமை முதல் மே 29 சனிக்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அழகு, ஃபேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் போன்றவற்றில் நாம் தள்ளுபடி பெற்று குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம்.
3DSS நிகழ்வில் உலகளாவிய பிராண்டுகள் மற்றும் உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிராந்திய சில்லறை விற்பனையாளர்களின் அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையில் பெறலாம். 1,500 க்கும் மேற்பட்ட கடைகளில் மிக குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து மால்கள், கடைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் கிளைகள் அனைத்தும் முறையான கோவிட் பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DFRE-ன் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் கஜா கூறுகையில், “3DSS துபாயின் கோடைகாலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் தற்பொழுது துவங்கப்படவுள்ளது. நகரத்தின் மிக முக்கியமான சில்லறை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ப்ரொமோஷன்களும் சலுகைகளும் கிடைக்கின்றன. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட நிகழ்வில் குடியிருப்பாளர்கள் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல் பரிசுகளை வெல்லும் வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.