ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ராஸ் அல் கைமாவில் உள்ள யானிஸ் மலையில் தனது குடும்பத்திலிருந்து காணாமல் போன இந்திய சிறுவனைக் கண்டுபிடித்ததாக ராஸ் அல் கைமா காவல்துறையினர் சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
3 வயதுள்ள அந்த சிறுவன் தற்பொழுது நல்ல நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறுவன் வெள்ளிக்கிழமை காணாமல் போனதைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அவரது பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தி காவல்துறையை அணுகியுள்ளனர்.
ராஸ் அல் கைமா காவல்துறை, சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவின் அயராத முயற்சிகளின் விளைவால் சுமார் 12 மணி நேரமாக காணாமல் போயிருந்த மூன்று வயதான சிறுவனை யென்ஸ் மலைப்பகுதியின் கரடு முரடான பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, ராஸ் அல் கைமா காவல்துறையின் பொது கட்டளை அறிவித்தபடி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு இந்திய குடும்பத்தினரிடம் இருந்து காவல்துறையின் செயல்பாட்டு அறைக்கு, குடும்பமாக ஜெபல் யென்ஸ் சென்றிருந்த போது தங்கள் குழந்தையை இழந்ததாகவும் தற்பொழுது வரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையைப் பெற்றதும், ராஸ் அல் கைமா காவல்துறையின் சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களும் விரைவாக அந்த இடத்திற்குச் சென்று ஒருங்கிணைந்த தேடல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் குற்றவியல் விசாரணைத் துறை, ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு, மீட்பு மற்றும் தேசிய ஆம்புலன்ஸ், காவல்துறை K9 பிரிவு, சிறப்பு போலீஸ் ரோந்து மற்றும் அல் தக்தாக்காவின் காவல் நிலையம், பிராந்திய மக்கள் மற்றும் ஹசா ஃபாசா சாகசக் குழுவின் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர். அத்துடன் தேசிய தேடல் மற்றும் மீட்பு மையத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இருளையும் பொருட்படுத்தாமல் மும்முரமாக நடந்த தேடுதலின் விளைவாக சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு, ஹஸ்ஸா ஃபாசா சாகசக் குழுவின் உறுப்பினர் ஒருவர் சனிக்கிழமை காலை சரியாக 6 மணியளவில் குழந்தை தூங்குவதைக் கண்டிருக்கிறார். மேலும் சிறுவனுக்கு சில சிறிய கீறல்களைத் தவிர வேறு காயங்கள் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர், அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அதனை தொடர்ந்து ராஸ் அல் கைமா காவல்துறையானது மலைப்பகுதிகளுக்கு வருபவர்களை தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இதுபோன்ற கரடுமுரடான பகுதிகளில் இருக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும், கண்காணிக்கவும், பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.